
பிரான்ஸில் நீடிக்கப்பட்டிருக்கும் சுகாதார அவசரகாலச் சட்டவிதிகள் (Etat d’urgence sanitaire) நாட்டுக்குள் பிரவேசிப்போரை குறைந்தது 30 நாட்கள் வரை தனிமைப் படுத்தி வைப்பதற்கு இடமளிக்கின்றது.
பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், ஷெங்கன் ஆகிய எல்லைகளுக்குள் வரும் நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் இருந்து வருவோரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தவும் தனிமைப்படுத்தவும் புதிய சட்ட விதிகள் அனுமதிக்கின்றன.
வைரஸ் பரவல் காணப்படும் நாடுகளில் இருந்து தொற்று அறிகுறிகளுடன் வருவோர் அதற்கெனத் தெரிவு செய்யப்படும் நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஏற்க மறுப்பவர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் இது பற்றிய முழு விவரங்களும் இனிமேல்தான் தெரியவரும் என்று அரசாங்க வட்டாரங்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளன.
ஆனால் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் எவரும் உள்ளே வர முடியாதவாறு நாட்டின் எல்லைகள் தற்சமயம் மூடப்பட்டுள்ளன. ஜூலை நடுப்பகுதிவரை இத்தடை அமுலில் இருக்கும்.
சுகாதார அவசர காலச் சட்டம் ஜூலை 24 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டிருந்தாலும் அதன் நீடிப்புச் சட்ட வரைவு இன்னமும் செனற் மற்றும் நாடாளுமன்ற அவைகளில் முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. ஒப்புதல் பெறுவதற்கான இழுபறிகள் நீடித்து வருகின்றன.
சுகாதார அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ்தான் மே 11 விடுவிப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டு அது ஓரிரு தினங்களில் நடைமுறைக்கு வரவிருக்கிறது. அதற்கு முன்பாக இந்தச் சட்ட வரைவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு அது சட்ட வலுவுள்ளதாக மாற்றப்பட வேண்டிய அவசரம் உள்ளது. நாட்டின் அரசமைப்புச் சபை (Conseil constitutionnel) இந்த சட்ட வரைவை இன்னும் அங்கீகரிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் நடந்த முதல் வாசிப்பில் சுகாதாரக் கண்காணிப்பு என்ற பெயரில் தனிமனித உரிமைகளை மீறுவதாகத் தெரிவித்து இந்த நீடிப்புச் சட்ட வரைவில் 600 க்கு மேற்பட்ட திருத்தங்களை எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. விட்டுக்கொடுப்புகளுடனான இறுதி வடிவம் ஒன்றை ஏற்றுக்கொள்ள வைக்கும் கடைசி நேர முயற்சிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன.
ஒருவேளை இந்த முயற்சிகள் தோல்வியடைந்து – எதிரணிகளின் எதிர்ப்பினால் அரசமைப்பு விவகாரச் சபை சட்டவரைவை ஏற்க மறுத்தால்- ஜனாதிபதி தனக்கிருக்கும் அதிகாரங்களைப் பாவித்து அரசமைப்புச் சபையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து சட்ட வரைவை தானே தனித்து சட்டமாக்கக் கூடிய வழிமுறைகள் பிரெஞ்சு அரசமைப்பில் உள்ளன.
அதிபர் மக்ரோன் இந்த வழிமுறையைப் பின்பற்ற அதிகம் வாய்ப்பு உள்ளது.
இதற்கான அரசியல் நடவடிக்கைகள் இந்த வார இறுதியில், சனி, ஞாயிறு தினங்களில் நடந்தேற வேண்டி உள்ளன.
சுகாதார அவசரகாலநிலை நீடிப்பு ஞாயிறு நள்ளிரவுக்குள் சட்டரீதியான அங்கீகாரம் பெற்றால் மட்டுமே மே 11 விடுவிப்புத் திட்ட நடைமுறைகளும் சட்ட வலுவுள்ளவையாக மாறும்.
09-05-2020 – குமாரதாஸன்