யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இரட்டைப் புலவு வைரவர் ஆலயத்துக்கு அருகில் இன்று நண்பகல் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் குடும்பத்தாருக்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
குறித்த வீட்டில் வசிப்போருக்கு இடையே சில காலமாக முரண்பாடு இருந்துள்ளது இந்நிலையில் இன்று மதியம் குறித்த வீட்டிற்கு சாதாரண உடையில் சென்ற இரு பொலிஸார் அங்கு உரையாடிய பின்பு வேலி பாய்ந்து குறித்த வீட்டிற்குள் பிரவேசித்ததை அடுத்து அங்கு குழப்பம் நிலவியது.
அவர்கள் எழுப்பிய குரல் கேட்டு அயலில் உள்ள இளைஞர்களும் குறித்த வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு இரு பகுதியினருக்கும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் காயத்துக்கு உள்ளாகி இருந்தார் அத்தோடு குறித்த வீட்டை சேர்ந்த இளைஞன் ஒருவரும் காயத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து அந்த வீட்டிலுள்ள நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வரவளைக்கப்பட்ட நோயாளர் காவு வண்டியும் பொலிஸாரால் திருப்பிவிடப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதேவேளை,
முள்ளிவாய்க்காலில் பொலிசார் மக்கள் மீது மூர்கத்தனமான தாக்குதல்: மூவர் வைத்தியசாலையில் அனுமதி.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்கள் மீது பொலிசார் மூர்க்த்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக்கு நேற்றிரவு சென்ற பொலிஸ் அதிகாரிகள் சிலர் ஒரு நபருடைய பெயரை கேட்டு அவர் எங்கே என்றும் அவரை கொண்டு வந்து ஒப்படைக்குமாறி கூறி மூன்று நபர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர்கள் 1990 நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,
யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்தவர்கள் மீதும் உடைமைகள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
நாகர் கோவில் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிப தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை தாக்குதல் நடாத்திய இராணுவத்தினர் மதுபோதையில் இருந்ததாகவும் , தாக்குதல் நடாத்தி விட்டு செல்லும் போது, தமது இரண்டு கைத்தொலைபேசிகளையும் , இராணுவ தொப்பி ஒன்றினையும் இராணுவத்தினர் தவற விட்டு சென்றுள்ளதாகவும் வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
பின்னணி.
கடந்த தைப்பொங்கல் தினத்தன்று மாலை, வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி வந்தார் என இராணுவத்தினர் அந்த நபரைக் கண்டித்த போது அந்த நபரின் உறவினர்கள் கூடியதால் துணிவடைந்த அவர் இராணுவச் சிப்பாயைத் தாக்கினார். சிப்பாயைத் தாக்கிவிட்டு அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பித்தனர்.
அதனை அடுத்து மறுநாள் அப்பகுதியை சுற்றிவளைத்த இராணுவத்தினர் , இராணுவ சிப்பாயை தாக்கியவரை கைது செய்ய தேடுதல் நடாத்தி இருந்தனர். அதன் போது சந்தேக நபர்கள் எவரும் கைதாகவில்லை. அவர்கள் அனைவரும் தலைமறைவாகி இருந்தனர்.
இராணுவத்தினர் சுமார் இரண்டு வார தேடுதலின் பின்னர் இராணுவ சிப்பாயை தாக்கியவர்கள் என 8 பேரை கைது செய்து பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர். பொலிசாரினால் சந்தேக நபர்கள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து வந்த வாரங்களில் வழக்கு விசாரணைகள் நடாத்தப்பட்டு தற்போது அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.