ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவார் கணேஸ் மாமா!

0
472

சிங்கள பேரினவாத இராணுவத்தின் இன அழிப்பின் போது 09.05.2009 அன்று சிறிலங்கா அரச படைகளின் எறிகணைவீச்சில் ஈழத்துக்கலைவாணர் கணேஸ் மாமா உள்ளிட்ட பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

காயப்பட்ட தமிழினத்தின் உள்ளங்களுக்கு நகைச்சுவை மருந்திட்ட கலைஞன். ‘ஈழத்து நாகேஷ்’ என தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு சிறந்த கலைஞரான கணேஸ் மாமா அவர்கள் 09.05.2009 அன்று சிறிலங்கா மேற்கொண்ட இன அழிப்புத்தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டார்.

போராட்டத்துக்காக “கலை” வடிவில் போராடிய உண்மை கலைஞன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்கள அரசு எம்மக்கள் மீது நாளும் விளைவிக்கும் இனவெறித் தாக்குதலை – கொடுமைகளை அதனால் துன்பப்படும் உறவுகளின் சொல்லிலடங்கா வேதனைகளை, தன் தத்துருவமான திறனால் அவற்றை ஓர் காட்சியாக நடித்து ஓர் உறவுகளின் உயிரோட்டமாக புலத்து மக்களிடம் சென்றடைந்து அவர்கள் புரிதலுக்கு ஏற்றவகையில் செயல்திறன் கொண்டவரும் எத்தனை எத்தனையோ போராளிகளின், தாய் – தந்தையர்களின், சகோதர – சகோதரிகள், மழலைகள் மனங்களில் நிறைந்தவர்.
தன்னடக்கம், குறும்பு சிரிப்பு, அனைவர் மனத்தையும் வசிகரிக்கும் பார்வை…..

வறுமையில் வாடினாலும் போராட்டத்துடன் ஒன்றிப்போன, போராடத்துகாகவே வாழ்வை அர்ப்பணித்து கடைசிவரை உறுதியாக இருந்த உண்மை மனிதர்களில் இவரும் ஒருவர்.
“நமது எதிர்கால சந்ததிக்கு, நாம் தலை குனிந்து பதில் சொல்லும் நிலைமை வந்து விடக்கூடாது”
பல காலமாக தமிழீழ திரைப்படத் துறையில் ஓர் கலைஞானாக வலம் வந்தவர். எல்லோராலும் கணேஸ் மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழீழ தேசம் ஓர் கலைத்துறையில் ஓர் சிறந்த கலைஞனை, ஓர் நகைச்சுவையாளனை தன்னுள் ஓர் வரலாறாக அரவணைத்தது.

கணேஸ் மாமாவின் நடிப்பும் அவரின் விடுதலைப்பற்று யாருக்கும் யாரும் சொல்லி தெரியவேண்டியதில்லை. மிக அண்மைகாலம் வரையில் போராட்டகளங்களுக்கு மத்தியில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தாய் மண்ணின் நினைவோடு தாயகத்திலிருந்து வரலாறாகிய இந்த கலைஞனுக்கு எமது இதய அஞ்சலிகள்

எத்தனை வருடம் சென்றாலும் ஈழத் தமிழர் மத்தியில் ஒளிர்விடும் கதிராக தோன்றுவர் நம் கணேஸ் மாமா தமிழீழ காற்றில் கலந்து எம் நெஞ்சமதில் நீங்காத நினைவுகளாய்……………..

கணேஸ் மாமாவின் விடுதலைக்கான உழைப்பின் சில காவியம்..!

இன்னும் ஒரு நாடு
அம்மா ! நலமா ?
உயிரம்புகள்
கடலோரக் காற்று

ஓர் நாள் விடியும் எம் தேசம் அங்கே உமக்கும் ஓர் இடமுண்டும் அன்று தேசத்தின் விடியலுக்காய் நீங்கள் உழைத்த பயனை நாமும், வருங்கால சந்ததியினரும் மகிழும் எம் தாய்மண்ணில்……………!

இன்றும் உம் உருவம் தொலைக்காட்சித் திரைகளில்
விடுதலை தாகத்தின் குரலாய் கேட்கிறது காதோரம்
கண்ணீர்தான் விழியோரம் நினைவுகளுடன்……

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here