செருப்பில்லாக் கால்களோடு
புழுதிபடிந்து அழுக்கப்பிய உடைகளோடு
வந்த வழியை மறந்துவிடாதீர்கள்
உயிரற்று விழுந்த உறவுகளைத் தொட்டழ முடியாமல் விட்டுவிட்டு ஓடிவந்ததையும்
எச்சில் விழுங்கி தொண்டை நனைக்க முடியாமல் அந்த வெட்டைக்குள் அழுது துடித்ததையும் எந்நொடியும் மறந்து வாழாதீர்கள். ஆடை அவிழ்த்து அம்மணமாய் நின்று ஒருபிடி சோற்றுக்காய் அடிமேல் அடி வாங்கியதை இந்நொடிவரை மறவாதிருங்கள்.
விலங்குகளை அடைத்தாற்போல் முட்கம்பி வேலிக்குள் சிறைப்படுத்தப்பட்டதையும்
உணவின்றித் தூக்கமின்றி சிறு குடிலுக்குள் சிறையுண்டதையும்
நினைத்துப்பார்க்கத் தவறாதீர்கள்
உங்கள் ஒவ்வொருவருக்காகவும் தங்களது உடலைச் சிதைத்து மண்ணுக்காய் வித்துடலானவர்களையும்
தம்முடல்களை இழந்து அங்கும் இங்குமாய் வாழ்வதற்காய் போராடிக்கொண்டிருக்கும் உறவுகளையும் எப்போதும் மறந்துவிடாதீர்கள்.
காவலூர் அகிலன்.