ஒன்றரை இலட்சம் எம் உறவுகளின் பெருவலி தொடர்ந்து எம்மைப் போராடவைக்கும்!

0
931

இனவழிப்பின் பதினோராம் ஆண்டு இது.
இன்றிலிருந்து சரியாக பதினொரு ஆண்டுகளிற்கு முன்னர் ஈழத்தமிழினம் சந்தித்த பெரு வலியினைத் நெஞ்சில்தாங்கி பயணிக்கிறது உலகத்தமிழினம்.

இன்று,தாயகத்தில் மட்டுமல்ல தமிழன் வாழும் ஒவ்வொரு தேசத்திலும் இனவழிப்பு செய்யப்பட்ட எம் உறவுகளுக்கான நீதி வேண்டியும், எம் உறவுகளின் நினைவுகள் தாங்கியும் போராட்டங்கள் இடம்பெறுகின்றது.

இனவழிப்பை இருட்டடிப்பு செய்ய எதிரியும், அவன்கூட்டாளிகளும் தீயாய் வேலைசெய்வதை,ஒவ்வொரு எம் உறவும் அறிந்துகொள்ளவேண்டும்.

வடக்கின் வசந்தம், கம்பரெலியா என பல திட்டங்களின் மூலம் அபிவிருத்தி அரசியல் என்னும் போர்வையில் தமிழினத்தை ஏமாற்றும் வேலைகளை சிங்கள அரசு மேற்கொள்ளும் வேளையில், ஒன்றரை இலட்சம் எம் மக்களின் இனவழிப்பை முன்னின்று நடாத்திய இந்தியா ஐம்பதாயிரம் விட்டுத்திட்டங்கள், குறிப்பிட்ட பல அரசியல்தலைவர்களிற்கு சலுகைகள் வழங்குவதன் மூலம் இனவழிப்பு பற்றிய சிந்தனைகளை திசைதிருப்புவதில் மும்முரமாக செயல்படுகின்றது.

நல்லாட்சி அரசிற்கு முட்டுக்கொடுத்து இனவழிப்பை போர்க்குற்றமாக சுருக்கிய கூட்டமைப்பு கனவான்கள் இன்று மகிந்தா தரப்புடன் அதை தொடர்வது தமிழினத்தின் துயரம்.
மறப்போம் , மன்னிப்போம் எனும் ரணிலின் அலட்சியம் கலந்த வாசகத்தை இங்கே நினைவூட்டுவது காலத்தின் தேவையாகும்.

தமிழ்மக்கள் மிக தெளிவாகவுள்ளார்கள்.
எம்மின சிறுவர்களை, குழந்தைகளை, பெண்களை , முதியவர்களை , நோயாளிகளை கொடூரமாக இனவழிப்பு செய்த எதிரியினை அவர்கள் மன்னிக்கத்தயாராகவில்லை.
இனவழிப்பிற்குள்ளான எம் உறவுகளின் அவலத்தையும் ஒருபோதும் மறக்கவும் தயாராகவில்லை.

இந்தியா,சீனா,ஜப்பான், நோர்வே உள்ளிட்ட மேற்குலகுகள்,அமேரிக்க, ஐ.நா சபை என எம் உறவுகளின் இரத்தக்கறை எல்லோர் கரங்களிலும் படிந்திருக்கின்றது.

துரதிஷ்டவசமாக நாம் இவர்களிடத்தில்தான் எம் உறவுகளிற்கான நீதியினை கேட்கவேண்டியிருக்கின்றது.
இவர்களை எதிர்த்துத்தான் நாம் போராடவேண்டியிருக்கின்றது.
ஆனாலும் நாம் ஒருபோதும் ஓயமாட்டோம்.
ஒன்றரை இலட்சம் எம் உறவுகளின் பெருவலி எம்மை ஓய்வற்று போராடவைத்துக்கொண்டேயிருக்கும்..

அன்பரசன் நடராஜா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here