கொழும்பில் கொரோனா வைரஸால் நேற்று மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று இரண்டாவது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 15, மோதரை (முகத்துவாரம்) பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இன்று உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பு தேசிய தொற்று நோயியல் தடுப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கொரோனா தொற்றால் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த குருநாகல் – பொல்பித்திகம பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், இன்று மோதரைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
இவருடன் சேர்ந்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் முதல் 7 பேரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.