பிரித்தானிய தலைநகர் லண்டனில் வாழ்ந்துவந்த தமிழ்த் தேசிய உணர்வாளரும், தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உதவித் திட்டங்களுக்கு தொடர்ந்து உதவிவந்தவருமான திரு. லோகசிங்கம் பிரதாபன் அவர்களது மறைவு எம்மைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா கொல்லுயிரித் தொற்றினால் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் லண்டனிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று சாவடைந்தார்.
யாழ் இந்துக் கல்லூரியில் கல்விகற்ற திரு, பிரதாபன், பல வருடங்களாக அதன் பழைய மாணவர் சங்கத்தின் லண்டன் கிளையின் செயற்குழு உறுப்பினராகச் செயற்பட்டுவந்தார். தனித்து அக்கல்லூரிக்கு உதவுவதுடன் நின்றுவிடாது வடபகுதியில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து உதவி வந்தார். பிரித்தானியவில் வாழும் தமிழ் இளையவர்கள் விளையாட்டுதுறையில் ஈடுபடுவதனை ஊக்குவிக்குமுகமாக பிரித்தானிய தமிழ் விளையாட்டுச் சபை என்றை அமைப்பை உருவாக்குவதில் திரு. பிரதாபன் முக்கிய பங்காற்றினார். அதன் தலைவராகச் செயற்பட்டுவந்த அவர் இவ்வமைப்பினூடாக தாயகத்தில் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்புகளைப் பேணிவந்த திரு. பிரதாபன். முன்னணியானது ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களுடனும் அங்கு செயற்படும் தேசியச் செயற்பாட்டாளர்களுடனும் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்கு உதவினார்.
விளையாட்டுத்து துறை தவிர்ந்து தமிழச் சமூகத்திற்கான நற்பணிகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதுடன் பல்வேறு செயற்திட்டங்களுக்கு நிதிப் பங்களிப்பினையும் வழங்கி வந்தார்.
திரு. பிரதாபனின் இழப்பு பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகத்திற்கும் பேரிழப்பாக அமைகிறது. அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கும், தமிழ்த் தேசியச் செயற்பாட்டளர்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தலைவர்.
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்.
தமிழ்தேசிய மக்கள் முன்னணி