மீண்டும் சேவைகள் தொடங்கும் போது ரயில் நிலையங்களின் வாயில்களில் கண்காணி ப்பு தீவிரமாக இருக்கும். கட்டம் காட்டமாகவே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுவர். விரைவில் ‘நவிகோ’ (Navigo) போக்குவரத்து அட்டையைக் காட்டி மாஸ்க் வாங்குவதற்கு பயணச்சீட்டுக் கருமபீடங்களில் ஏற்பாடு செய்யப்படும்.
பாரிஸ் பிராந்தியத்தின் தலைவி Valérie Pécresse இத்தகவல்களைத் தெரிவித்திருக் கிறார்.
மே 11 ஆம் திகதிக்குப் பின்னரான பொதுப் போக்குவரத்துகள் தொடர்பில் ஞாயிறு பத்திரிகைக்கு( Le Journal du Dimanche) அளித்த செவ்வியில் பல விடயங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
முக்கியமானவை வருமாறு :
முதல் மூன்று வாரங்களுக்கு சாதாரண மாஸ்குகளை நிலையங்களின் வாயில்களில் வைத்தே பயணிகளுக்கு வழங்க எதிர்பார்க்கிறோம். இதைவிட நவிகோ அட்டைகளை வைத்திருக்கும் அனைவருக்கும் துணியினாலான மாஸ்குகளை கரும பீடங்களில் வழங்க உத்தேசித்துள்ளோம். இதற்கென 2 மில்லியன் மாஸ்குகளை தயாரிக்க ஏற்பாடாகி உள்ளது.
விரைவில் மாஸ்குகளை விநியோகிக்கும் தானியங்கி விநியோக இயந்திரங்களை முக்கிய ரயில் நிலையங்களில் நிறுவி அவற்றினூடாக அரசின் கட்டுப்பாட்டு விலையில் அவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
கைகளைத் தூய்மையாக்கும் ஜெல்லை (hydroalcoholic gel) பெறக்கூடிய தானியங்கி கருவிகள் ஆங்காங்கே பெரிய ரயில்நிலையங்களில் பொருத்தப்படும்.சில பஸ்களிலும் இந்த வசதி இருக்கும்.
சமூக இடைவெளியைப் பேணுவதற்கு வசதியாக பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் 5 மில்லியன் என்ற கணக்கில் இருந்து அரைவாசியாகக் கட்டுப்படுத் தப்படும்.
60 பயணிகள் செல்லக்கூடிய பஸ்களில் அது 20 ஆக குறைக்கப்படும். 700 ஆசனங்கள் கொண்ட மெற்றோக்களில் 180 பேர் மட்டுமே பயணிக்கலாம். 2,500 இருக்கைகளைக் கொண்ட RER A ரயிலில் ஆக 800 பேர் மட்டுமே செல்லமுடியும். இந்த அடிப்படையில் பயணிகள் தொகை குறைக்கப்படும்.
இதற்கு வசதியாக ரயில் நிலையங்களு க்குள் பயணிகளை வடிகட்டி அனுமதிக்க 5ஆயிரம் காவலர்கள் பணியில் இருப்பர்.
மாஸ்க் அணியாமல் பயணிப்போருக்கு தண்டம் அறவிட ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளோம்.
இவை போன்ற தகவல்களை Valérie Pécresse வெளியிட்டிருக்கிறார்.
03-05-2020 (குமாரதாஸன்)