கொவிட்-19 எனும் கொரோனா வைரஸின் பாதிப்புகளால் உலகிலுள்ள அனைத்து மக்களும் பெரும் நெருக்கடியினை அனுபவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்களின் மானசீக குருவாக, பிரமிப்பாக, உந்துதலாக, ஊக்கியாக இருக்கின்ற தராகி சிவராமின் 15வது ஆண்டு ஞாபகார்த்த தினத்தினை நினைவு கூரவேண்டிய கட்டாயத்திலும் நாம் இருக்கிறோம் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் எல்.ரி.அதிரன் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேற்று (29) சிவராமின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்,
‘இலங்கையின் இன விடுதலைப் போராட்டமானது பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது. இது வடக்கு கிழக்கு பிரதேசம் சார்ந்தும், தேசிய அளவிலும், சர்வதேச பூகோள ரீதியிலும் அதன் தாக்கத்தினை உணர்த்தியும், கடந்துமே நகர்ந்து வந்திருக்கிறது. நகர்ந்து கொண்டும் இருக்கிறது.
இந்நிலையில் இதற்குள் அகப்பட்டு தங்கள் உயிரைக் கொடுத்த, தங்களைத் தொலைத்துக்கொண்ட தேசம் கடந்து, தேசம் விட்டுப் புலம்பெயர்ந்த ஊடகக்காரர்கள் ஏராளம். அந்த வகையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்காகவே தன்னை அனைத்து வகைகளிலும் அர்ப்பணித்த ஒருவராக சிவராம் இருக்கிறார்.
நினைவு, ஞாபகார்த்த தினங்கள் ஏன் நிகழ்த்தப்படுகின்றன என்பதற்கான விளக்கங்களே இல்லாத கால கட்டமாக, ஒருவருக்கான நினைவுபடுத்தலை வெறும் காட்சிப்படுத்தலாக ஏற்படுத்திக் கொள்கின்ற நிலைமைக்கு அப்பால் நினைவை மீட்டுப்பார்க்க மட்டுமே காலம் இடம் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களே அதிகம்.
அந்த வகையில் தன்னுடைய பேனாப் போராட்ட வரலாற்றினை மிக அழுத்தமாகவும் தெளிவாகவும் பதிவு செய்துவிட்டு இலங்கையின் தலைநகரிலுள்ள நாட்டின் சட்டவாக்கத் தளத்துக்கு அருகிலேயே படுகொலையான ஊடகப் போராளியான சிவராமின் ஞாபகார்த்த தினத்தினை தங்களுடைய வீடுகளிலேயே நினைவுகூரும்படி அனைத்து தமிழ் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல அவருடன் கூடி, பழகி, நினைவுகளோடு இலங்கை நாட்டில் மாத்திரமல்ல உலகின் அனைத்துப் பாகங்களிலும் வாழும் அனைவரையும் கிழக்கிலங்கை ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டிக்கொள்கிறது.
தனக்கிருந்த உயிருக்கான அச்சுறுத்தல்களை உணர்ந்திருந்தும் அதனைப் பொருட்படுத்தாது தமிழ்த் தேசிய நலனும், அதன் எதிர்காலமுமே முக்கியமும் காலத்தின் தேவையுமாகும் என்ற தீராத விடாப்பிடியுடன் செயற்பட்ட ஒரு எழுத்தாளரை, கட்டுரையாளரை, ஊடகவியலாளரை நாம் அனைவரும் இழந்து போனது பெரும் துர்ப்பாக்கியமே.
ஆனாலும் அவருடைய நினைவு நாட்களின் ஊடாக அவர்கொண்ட, விட்டு, விதைத்துச் சென்றுள்ள காலங்காலமான வரலாற்றுப் பணியினை தனிப்பட்ட சுயநலன்களுக்காக, காட்சிப்படுத்தல்களுக்காக அல்லாமல் அவர் புகட்டிய பாதையில் தொடர்ந்து முன்கொண்டு செல்லவேண்டியதே ஒவ்வொரு மக்களதும் ஊடகக்காரர்களதும், செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களதும் கடமையாகும்.
நாட்கள் கடந்து போகின்றன அதன் நகர்வில் நாமும் போகிறோம் என்றல்லாமல் வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை ஒருமித்த பலமாக தமிழ் மக்கள் அரசியல் மயப்படலின் மூலமாகவே பெற்றெடுக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டிருந்த சிவராமின் சிந்தனையை முன்நோக்கிக் கொண்டு செல்வதற்கான தீர்மானமான உறுதி மொழியினை எடுத்துக் கொள்ளவும் வேண்டும்.
தமிழர் பிரதேசங்களின் மூலை முடுக்கெல்லாம் அறிந்த அதன் ஒவ்வொரு நிலைமைகளையும் புரிந்திருந்த சிவராமைப்போன்ற பல்துறைப் புலமையுள்ள ஓர் ஊடகப் போராளியை இழந்துவிட்ட தமிழ் ஊடகத்துறை அதற்காகக் கவலை மட்டுமே பட்டுக் கொள்ள முடிகிறது.
தமிழ்த் தேசியவாதத்தினுடைய தேவை, போதாமைகள், சிக்கல்ககள் பற்றிய சிந்தனைகளுடன் செயற்பட்டிருந்த சிவராம் போன்ற பேனா பிடித்த போராளிகள் தமிழ் ஊடகத்துறைக்குக் கிடைக்குமா என்ற கவலை இன்னும் தொடர்கிறது.
தேசியம் என்பதில் முக்கியமான கூர்மையான அங்கமாக ஊடகங்களும் ஊடகங்களின் பணிகளும் அமைவதே இன்றைய தகவல் யுகத்தில் தேசிய மட்டத்திலான, சர்வதேச தளங்களிலான மூலோபாயத்தின் கட்டமைப்புக்கு உதவும் என்ற சிந்தனை கொண்ட சிவராம் தமிழ் ஊடகத்துறை அவ்வாறானதொரு நிலையை எட்டிப்பிடிக்கவேண்டும் என்று கனவு கண்டிருந்தார். அதற்கான பணிப் பங்களப்பினைச் செய்தார். நாம் எதனைச் செய்தோம் என்று ஒவ்வொருவரும் இந் நாளில் கேள்விகளைத் தொடுத்துக் கொள்வோம்.
ஒவ்வொருவரும் கால ஓட்டத்தின் ஊடு பயணித்து காலமாற்றங்களினால் கற்பிக்கப்பட்டே வழிநடத்தப்படுகிறார்கள் என்ற வகையில் சிவராம் கற்றுக் கொடுத்த பாடங்களினுடாக சிவராம் பற்றிய ஒட்டுமொத்த புரிதலையும், பார்வையையும் தெளிவாக்கிக் கொண்டு பயணிப்போம் என்று இந்த ஞாபகார்த்த தினத்தில் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும்.’ – என்றார்.