தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இலங்கையில் உயிரிழந்த தனது தந்தையின் உடலை காணொளிக் காட்சியின் மூலம் காண்பதற்கு கூட முருகனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் மனித நேயமற்றதாகும். இத்தகைய துயரகரமான சூழ்நிலையில் சிறைவாசிகளுக்கு பரோல் விடுதலை அளிப்பதற்கு சட்டம் அனுமதிக்கிறது. முருகன் இலங்கைக்குச் செல்வதை சிறை நிர்வாகம் அனுமதிக்க இயலாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த நிலையில் குறைந்த பட்சம் காணொளிக் காட்சி மூலம் அவரது தந்தையின் முகத்தை இறுதியாகப் பார்ப்பதற்குக் கூட அனுமதிக்க மறுத்திருப்பது மிகக் கொடுமையானது. கடந்த 28 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் வாடி வரும் முருகனுக்கு தாங்கொணாத துயரத்தை இது அளித்திருக்கும். அறிவியல் வளர்ந்தோங்கியிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் கூட இது போன்ற கொடுமைகள் இழைக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மிக நீண்ட காலமாக சிறையில் வாடி வரும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்த போதிலும் ஆளுநர் அனுமதித் தராமல் கால தாமதம் செய்து வருகிறார். கொரோனா தொற்று நோய் பரவி வரும் கட்டத்தில் சிறைவாசிகள் பலர் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் எழுவரையும் மற்றும் நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கும்படி தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்.