வரலாறு நினைவுகளை மீட்டுகிறது!
வல்லரசு என்றும் வளராத நாடு என்றும் ஒரு பேதமில்லாத உலகை – சமரசம் உலாவும் இடமாக – உணரவைத்திருக்கிறது கொரோனா வைரஸ்.
உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தலைமை தாங்கி வழிநடத்த முடிந்த அமெரிக்க வல்லரசு கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸின் காலில் வீழ்ந்து கிடக்கிறது.
முப்படைகளுக்கு மேலதிகமாக விண் வெளிப்படையை நிறுவிய பேரரசுகள் தங்கள் மருத்துவர்களுக்கு மாஸ்க் வாங்கி வைக்க மட்டும் மறந்துவிட்டன.
ஆஸ்பத்திரிகளில் வைரஸை எதிர்த்துப் போராடும் அமெரிக்க மருத்துவர்கள் தங்களைப் பாதுகாப்பதற்கான தற்காப்பு அங்கிகள் இன்றி அவதிப்படுகின்றனர்.
அவசர உதவியாக மருத்துவர்கள் அணியும் தொற்றுத் தடுப்பு மேலங்கிகளை கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றது வியட்நாம்.
ஆபத்தில் கைகொடுத்து உதவும் வியட்நாமுக்கு தனது நாட்டு மக்களின் சார்பில் அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்திருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.
இங்கேதான் வரலாறு அதன் நினைவுகளை மீட்டுகிறது.
உலகம் முழுதும் மலேரியா தலைவிரித்தாடிய 1960 – 70 காலப் பகுதியில் வியட்நாமின் கம்யூனிஸ்ட் போராளிகள் இப்போது போன்ற பெரும் சுகாதாரச் சவாலை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டுவந்தனர். மலேரியாவால் வியட்நாம் விடுதலைப்போராட்டம் தோல்வியின் விளிம்புக்குச் சென்று தப்பிப் பிழைத்து வந்த சரித்திரம் அது.
வியட்நாமின் மழைக்காடுகளிலும் சதுப்பு நிலங்களிலும் கம்யூனிஸ்ட் போராளிகள் அமெரிக்கப் படைகளை எதிர்த்து கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலம். .எதிரியின் குண்டுகளுக்கு இலக்கானவர்களின் தொகையை விட அதிகமான போராளிகள் மலேரியா நுளம்புக்கடிக்கு இரையாகிக் கொண்டிருந்தனர். எங்கே போராட்டத்தின் தலைவிதி முடிவுக்கு வந்து விட்டதோ என அஞ்சப்பட்ட தருணம் அது.
இன்றைக்குப் பரபரப்பாகப் பேசப்படும் குளோரோகுயின் வகை மருந்துகள் பயன்பாட்டுக்கு அறிமுகமாகி இருந்த ஆரம்பகாலகட்டமும் அதுதான். ஆனாலும் மலேரியாவுக்கு ஒரே மருந்தாக நுளம்பு வலைகளைத்தான் நம்பிருந்தது உலகம்.
அமெரிக்கப் படைகளின் மருத்துவப்பிரிவுகள் குளோரோகுயினைக் கொண்டு தமது சிப்பாய்களை மலேரியாவின் பிடியிலிருந்து காத்தன. ஆனாலும் வியட்நாம் போரில் சுமார் 40 ஆயிரம் அமெரிக்கப் படையினர் மலேரியா தொற்றுக்கு இலக்காகினர்.
எதிர்த்தரப்பில் வியட்நாம் போராளிகளிடமோ தடுப்பு மருந்து என்று ஏதும் இல்லை. நுளம்புகளோ விடுவதாயில்லை. சாவுகளோ அதிகரிக்கின்றன. இந்த சமயத்தில்தான் சீனாவில் இருந்து பாரம்பரிய காய்ச்சல் தடுப்பு மூலிகையான Artemisia annua செடிகளை வியட் கொங் (Viêt-Cong) இயக்கத்தின் வழங்கல் பிரிவினர் காடுகள் வழியே கடத்திக் கொண்டுவருகின்றனர்.
கைவசம் கிடைத்த அந்த பாரம்பரிய சீன மூலிகையின் கசாயத்தைக் காய்ச்சிக் குடித்து காய்ச்சலை வென்று பெரும் அதிசயமாக அழிவில் இருந்து மீண்டெழுகின்றனர்.
கெரில்லாக்களின் இந்த மலேரியா தடுப்பு முறையை கடைசிவரை அமெரிக்கப் படைகளால் அறிந்து கொள்ள முடியாமற்போனது.
வியட்நாம் விடுதலைப் போரின் பெரு வெற்றியை அடுத்து அதுவரை சீனாவில் பாரம்பரிய மூலிகை மருந்து என்ற தரநிலையில் இருந்துவந்த Artemisia annua மலேரியாச் சிகிச்சைக்குரிய முறைப்படியான ஒரு மருந்து என்ற அங்கீகாரத்தைப் பெறுகிறது.
இன்றைக்கு ஒரு சுதந்திர தேசமாய் நிமிர்ந்து நிற்கும் வியட்நாம், அமெரிக்காவுக்கு அவசர மருத்துவ உதவிக்கரம் நீட்டுவது பழைய வரலாற்றை மீட்டுகின்ற ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
தமிழர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி வன்னிப்பெருநிலப்பரப்பில் தஞ்சமடைய நேர்ந்த (1995)ஆரம்ப நாட்களில் அங்கு வாந்திபேதி வந்து பெரும் கொள்ளை நோய் போல மக்களை மிரட்டியது.
மாபெரும் இடம்பெயர்வு அவலத்தின் நடுவே வாந்திபேதியை ஒடுக்க புலிகளின் சுகாதாரப் பிரிவுகள் கையாண்ட வழிமுறைகளை, இன்று பெரும் வல்லரசுகளே நிலைகுலைந்துபோய் நிற்கின்ற வைரஸ் காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் பெருமையுடன் நினைவுபடுத்திப் பார்க்கின்றனர். .
இதுபோன்றே விடுதலைப் போராட்டங்கள் கொடிய நோய்களைச் சந்தித்த பல சம்பவங்கள் சரித்திரம் நெடுக எழுதப்பட்டு வந்திருக்கின்றன.
அமெரிக்காவின் குளோரோகுயினுக்கு நிகரான சீன மூலிகை மருத்துவத்தின் மூலம் விடுதலைப்போராட்டம் வெற்றி கொள்ளப்பட்டமை வியட்நாம் வரலாற்றில் ஓர் அத்தியாயமாக எழுதப்பட்டுவிட்டது.
ஆனால் குளோரோகுயினுக்கும் Artemisia annua மருந்துகளுக்கும் இடையிலான போட்டி உலக அளவில் இன்றும் தொடர்கின்றது..
17 ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக பெரு நாட்டில் வளரும் சின்ஷோனா (Cinchona) என்ற ஒருவகை மரத்தின் பட்டைகள் – நம் ஊரில் மரமஞ்சள் போன்று – வைரஸ் தொற்றுக் காய்ச்சல்களுக்கான தடுப்பு மருந்தாக அங்குள்ள பழங்குடிகளால் பயன்படுத்தப் பட்டுவந்திருக்கின்றன.
இந்த மரத்தின் பட்டைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மூலங்களை அடிப்படையாகக் கொண்டே பிற்காலத்தில் (1934) குளோரோகுயின் என்ற மருந்து அறிமுகமானது. காலப்போக்கில் மலேரியாவுக்கான ஒரே தடுப்பு மருந்தாக இது மாறிவிட்டது. தற்போது பரவும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் சிகிச்சைகளுக்கும் குளோரோகுயின் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால் குளோரோகுயினின் வரலாற்றுக்கு முந்திய சீன மூலிகை மருத்துவத்தில் Artemisia annua செடிகளின் உலர்ந்த இலைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.
சீனாவில் சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த Artemisia annua செடிகள் வைரஸ் தொற்றுகளை தடுப்பதில் குளோரோகுயினுக்கு நிகரானவை. ஆப்பிரிக்காவிலும் உலகின் வேறு பகுதிகளிலும் மலேரியாத் தடுப்புக்கான மாற்று மருந்தாக இந்த மருத்துவச் செடியின் இலைகள் தற்போதும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
Artemisia annua மருந்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பானத்தை நாட்டு மக்கள் அனைவருக்கும் குடிக்கக் கொடுக்கும் திட்டத்தை மடகஸ்கார் நாட்டின் அதிபர் Andry Rajoelina ஆரம்பித்திருக்கிறார். கொரோனா வைரஸில் இருந்து மக்களைப் பாதுகாக்க தேநீர் போன்ற இந்தப் பானம் உதவும் என்று அவர் நம்புகிறார்.
ஐரோப்பா உட்பட உலகெங்கும் Artemisia annua இலைகளை உலர்த்தி தயாரிக்கப்படும் மருந்துகள், எண்ணெய்கள் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளபோதும் இந்த மருந்தை மலேரியா தடுப்பு மருந்தாக அங்கீகரிக்க உலக சுகாதார நிறுவனம் மறுத்துவருகிறது.
பிரான்ஸ், பெல்ஜியம் போன்றன Artemisia annua மருந்து வகைகளை சிகிச்சைக்குப் பயன்படுத்த தடைவிதித்துள்ளன.
உலக அளவில் மருந்துப் பொருள்களைத் தயாரித்து விநியோகிக்கும் பெரு நிறுவனங்களைச் சார்ந்த ‘லொபி’ கள் இந்தத் தடைக்குப் பின்னால் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
படங்கள் : 1- ‘வியட் கொங்’ போராளிகள்.
2 – மலேரியா நோயாளியுடன்
காடுகளில் அமெரிக்கப்
படையினர்.
27-04-2020. – குமாரதாஸன்.
பாரிஸ்.