கடந்த 28 வருடங்கள் கொடுஞ்சிறையில் வாடும் முருகனின் தந்தை வெற்றிவேல் தனது 75 வது வயதில் இன்று யாழ்ப்பாணம் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
தனது தந்தை இறப்பதற்கு முன்னர் தன் தந்தையுடன் தொலைபேசியில் காணொளி முறையில் தொடர்புகொள்ள தனது சட்டத்தரணி மூலம் முருகன் மேற்கொண்ட முயற்சி தமிழக அரசால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.
இறந்த தன் தந்தையின் இறுதிக்கிரிகைகளினை இதே காணொளி தொலைபேசி மூலம் பார்வையிடும் சந்தர்ப்பம் முருகனுக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை.
கடந்த காலங்களில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் யாழ்ப்பாணத்தில் ,பல நிகழ்வுகளில் கொண்டாடி மகிழ்ந்த எமது தமிழ் அரசியல் தலைமைகளால் , முருகனுக்கு தன் அன்பிற்குரிய தந்தையுடன் இறப்பதற்கு முன்னர் ஒரு நொடியேனும் உரையாடக்கூடிய அனுமதியினை பெற்றுக்கொடுக்கமுடியவில்லை.
கடந்த காலங்களில் பல தடவை இந்திய தூதரக அதிகாரிகளுடன் பல்வேறுபட்ட விருந்துகளில் கலந்து சிறப்பித்த சம்பந்தன் ஐயாவிற்கும்,
சில காலத்திற்கு முன்னர் இந்தியா விஜயத்தை மேற்கொண்டு ஒன்றுக்குமே உதவாத நடிகர் ஒருவரை சந்தித்து மகிழ்ந்த விக்கி ஐயாவிற்கும் முருகனை யார் என்று தெரியுமா என்பது சந்தேகமே..
ஜோடிக்கப்பட்ட குற்றத்திற்காக சிறையில் வாடும் முருகன் இதுவரை இழந்தது ஏராளம்.
தன் தந்தையின் இறுதிக்குரலை ஒரு தடவையேனும் கேட்டுவிடவேண்டும், தன் தந்தையின் முகத்தை உயிருடன் ஒரு தடவையேனும் பார்த்துவிடவேண்டும் என்னும் முருகனின் நியாயமான ஆசையினைக்கூட நிறைவேற்ற முடியாத ஓர் இனமாகத் தமிழினம் இருப்பது உண்மையிலேயே வெட்கக்கேடானது.
சபிக்கப்பட்ட தமிழினத்தின் குடிமகனாக கண்ணீர் அஞ்சலிகள் ஐயா.
சென்றுவாருங்கள்…
அன்பரசன் நடராஜா.