கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர இந்தியா நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், அண்டை நாடுகளின் எல்லைகளையும் மூடியுள்ளது.பங்களாதேஷ் இளையர் ஒருவர் நீந்தி அசாம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார். மேலும், கொரோனா சிகிச்சைக்காக வந்துள்ளேன் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘‘வங்காளதேசம் சுனம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இரண்டு நாட்டிற்கும் இடையில் ஓடும் குஷியாரா ஆற்றில் நீந்தி அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் இந்திய எல்லைக்குள் வந்துள்ளார். இந்திய எல்லைக்குள் வந்ததும் கிராம மக்கள் அவனைப் பார்த்துள்ளனர். உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நாங்கள் அவரை மீட்டோம்.
அந்த வாலிபருக்கு காய்ச்சல் இருந்தது. மேலும் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். சிகிச்சை பெறுவதற்காக வந்தேன் என்றார்.
அவனுக்கு கொரோனா இருக்கிறதா? என்பது குறித்து எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் உடல்நலம் குன்றியிருந்தான். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிராம மக்கள் அவனிடம் செல்ல பயப்பட்டனர். பரிசோதனைக்குப் பின்னரே தெளிவாகத் தெரியும்’’ என்று எல்லை பாதுகாப்புப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மக்கள் கொரோனா அச்சத்தால் இருக்கும் நிலையில், அடுத்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொரோனா சிகிச்சைக்காக வந்தேன் என்று கூறியுள்ளது அக்கிராம மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது