நெதர்லாந்தில் மிங் (Mink) எனப்படும் மென்மையான மயிருடன் கூடிய தோலைக் கொண்ட சிறு விலங்குகள் இரண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளன.
இதனையடுத்து தோல்களுக்காக வளர்க்கப்படும் (Fur farming)
இந்த அப்பாவி உயிரினங்களைப் பராமரிக்கும் இரண்டு பெரிய பண்ணைகளை மூடித் தனிமைப்படுத்துமாறு நெதர்லாந்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தெற்கு நெதர்லாந்தில் Eindhoven பகுதிக்கு கிழக்கே மிக மோசமாக வைரஸ் பரவியிருக்கும் Brabant பிராந்தியத்தில் இந்த இரு பண்ணைகளும் அமைந்துள்ளன. இங்கு சுமார் 20 ஆயிரம் மிங் விலங்குகள் வளர்க்கப்பட்டுவருகின்றன.
சுவாசிக்க சிரமப்படுவது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியதை அடுத்து நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இருந்து இரு விலங்குகளுக்கு அங்குள்ள பணியாளர்கள் மூலம் வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டி ருக்கிறது.
உடனடியாக இரு பண்ணைகளையும் மூட உத்தரவிட்டிருக்கும் நெதர்லாந்தின் விவசாயத்துறை அமைச்சு, அருகே உள்ள வீதிகளை மூடி அங்கிருந்து 400 மீற்றர் சுற்றுவட்டப் பகுதிகளில் ஆட்கள் நடமாடுவதை தடை செய்திருக்கின்றது.
நவநாகரீக குளிர் கால மேலாடைகளுக்காக (fur jacket) மிங் விலங்குகளின் மென் மயிர் போர்த்திய தோல்கள் உயிருடன் உரித்து எடுக்கப்படும் கொடுமை உலகெங்கும் நடக்கிறது.
மர அணில்களை ஒத்த மென்மையான சிறு பிராணிகள் மீது இளைக்கப்படும் இந்த அநீதி நெதர்லாந்தில் சர்ச்சைக்குரிய ஒரு விவகாரமாக இருந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டில் இருந்து இந்த விலங்குப் பண்ணைகளை மூடிவிடுமாறு ஏற்கனவே நாட்டின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெதர்லாந்தில் வைரஸ் தொற்றினால் இதுவரை 4ஆயிரத்து 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 37 ஆயிரம் பேர் பீடிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் புலிகள், ஹொங்கொங்கில் நாய்கள் என்று உலகில் அரிதாக வைரஸ் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு தொற்றியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் மனிதர்களில் வைரஸ் பரவும் வேகம் தணிந்து வருகிறது. ஆனால் அது அதன் அடுத்த அலையாக லட்சக்கணக்கான உயிரினங்கள் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குப் பண்ணைகளிலும் இறைச்சிப் பண்ணைகளிலும் தொற்றக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
(குமாரதாஸன்)