பிரான்ஸில் பூங்கன்றுகளுக்குப் பதிலாக காய்கறிகள், பழமரக்கன்றுகளின் விற்பனை உயர்ந்திருக்கிறது.

கோடை காலம் தொடங்கியதும் பொதுவாக பூங்கன்றுகளை வாங்கி நட்டு வீட்டுத் தோட்டங்கள் அலங்கரிக்கப்படுவது வழமை. இந்தவருடம் கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் பலரும் பூங்கன்றுகளைத் தவிர்த்து காய்கறி விதைகளையும் பழமரக்கன்று களையும் வாங்கத்தலைப்பட்டுள்ளனர் என்று அவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மரக்கறிப்பயிர்ச் செய்கையில் திடீரென நாட்டம் ஏற்பட்டமைக்கு தற்போதைய உள்ளிருப்புக் காலம் நீடிக்கலாம் என்ற அச்சமும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இணைய வழியான மரக்கறி கன்றுகளின் விற்பனை வழமையைவிட மூன்றுமடங்கு உயர்ந்திருப்பதாக பிரான்ஸின் பெரும் தோட்ட கன்றுகள் விற்பனை மையமான Benoist group தெரிவித்துள்ளது.
இதேவேளை தங்களின் சந்தைகளில் மரக்கறிகளையும் பழங்களையும் வாங்க வருவோர் அவை எங்கிருந்து வருகின்றன என்று வினவிய பிறகே அவற்றை வாங்குகின்றனர் என்றும் அதன் இயக்குநர் குறிப்பிடுகிறார்.
பொதுவாக ஸ்பெயின் போன்ற அயல் நாடுகளில் இருந்து வரும் பழங்கள், காய்கறிகளை தவிர்க்கும் போக்கும் பிரெஞ்சு மக்களிடையே காணப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் சுதேசியப் பொருள்களை விரும்பி நுகரும் தன்மையை இந்த வைரஸ் நெருக்கடி உருவாக்கியிருக்கிறது.
(குமாரதாஸன்)