பிரான்சில் சுகயீனம் காரணமாக இன்று (24.04.2020) வெள்ளிக்கிழமை சாவடைந்த ஆசிரியர் சிவராசா ஜெகன் அவர்களுக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு இரங்கல் தெரிவித்துள்ளது.
அந்த இரங்கலின் முழுவிபரம் வருமாறு:-
ஆசிரியர் சிவராசா ஜெகன் அவர்களுக்கு இரங்கல் இயம்பல்!
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியக ஆசிரியப் பயிற்றுநராகவும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் ஆசிரியராகவும் இருந்த ஜெகன் ஆசிரியர் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம். இவர் தாயகத்தில் புவியியல் சிறப்புக்கலை ஆசிரியராகவும் முல்லைத்தீவு மாவட்ட கல்வித் திணைக்களப் புள்ளிவிபரவியல் பணிப்பாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் நினைவுகொள்ளத்தக்கது.
2014 இல் பிரான்சில் தஞ்சம் புகுந்த காலம் தொட்டுத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஆசிரியப் பயிற்சிப்பட்டறையில் பயிற்றுநராக இருந்தவர்.
சிறந்த கல்விமானாகவும் பண்பட்ட பண்பாளனாகவும் தமிழ்ச்சோலைகளில் வலம் வந்த உன்னத மனிதர் அவர். அதிர்ந்திடாத குரலுக்கும் ஆழமான மொழியாடலுக்கும் சொந்தக்காரன். நடப்பு அரசியலை புள்ளிவிபரத் துணையுடன் தனது இலாவகமான விளங்கவைக்கும் திறனால் ஆசிரியர்களுக்குப் புகட்டும் வல்லமைமிக்கவர். தனது ஜனரஞ்சகப் பேச்சுத்திறமையால் பலமேடைகளை கட்டிவைத்தவர். சிறந்த நாடக நடிகனாகவும் சிறுகதை எழுத்தாளனாகவும் விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தவர்.
உலகமே ஒடுங்கியிருக்கும் இந்த வேளையில் அன்னாரின் மறைவுச் செய்தி எம்மையும் கதிகலங்க வைத்துள்ளது. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளின் ஆசிரியவாண்மைக்கும் அன்னார் ஆற்றிய அரிய சேவையை என்றுமே தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நினைவு கொள்ளும். அவரின் மறைவால் வாடும் குடும்பத்தினர் உற்றார் உறவினர்களோடு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் துயருறுகின்றது.
திரு. க. ஜெயகுமாரன்
பொறுப்பாளர்
24-04-2020
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு