மக்களை விடுவிக்கும் திட்டங்களை எவ்வாறு தயாரிப்பது என்று ஐரோப்பிய நாடுகள் தலையைப் பிய்த்துக் கொண்டு ஆலோசிக்க வேண்டி இருக்கிறது.
வைரஸ் தொற்று சற்றுத் தணிந்துவந்தாலும் அதன் அடுத்த கட்டத் தாக்குதல் பற்றிய அச்சங்கள் உள்ளன. ஆய்வுகளுக்குள் அகப்படாத பல குணாம்சங்களைக் கொண்டுள்ள கொரோனா வைரஸுடன் மோதிக்கொண்டே நாட்டின் வழமை வாழ்வை திரும்பக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் அரசுகளுக்கு.
பிரான்ஸில் மே 11 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை முடக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் பெருந்திட்டம் பெரும்பாலும் எதிர்வரும் வாரம் வெளியாகும் என்று எலிஸே மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மிகச் சிக்கலான, ஆனால் நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற இந்த விடுவிப்புத் திட்டத்தை தயாரித்திருப்பவர் சிவில் சேவைகளில் அனுபவம் வாய்ந்த அதிகாரியான Jean Castex.
எப்ரல் 2 ஆம் திகதி இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதில் இருந்து அரசாங்க வட்டாரங்களில் “Monsieur Déconfinement”
(In french) என்று அழைக்கப்பட்டுவரும் Jean Castex, முன்னாள் அதிபர் நிக்கலஸ் சார்கோஷியின் துணைப்பொதுச் செயலாளர் நாயகமாக இருந்தவர்.
சுகாதாரம், விளையாட்டு என்ற பல துறைகளில் திட்டமிடும் திறன் மிக்க மூத்த சிவில் அதிகாரி என்று பெயரெடுத்தவர். 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான இடைநிலை அதிகாரியாகவும் தேசிய விளையாட்டு அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
பிரதமர் பணிமனையுடனும், சுகாதார அமைச்சுடனும் இணைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் , துறைசார் நிபுணர்கள் என்று பலரது சிபாரிசுகளை உள்வாங்கி மிகக் குறுகிய காலத்தில் இவர் தயாரித்துள்ள பெருந்திட்டம் வரும் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை –
மக்களை விடுவிக்கும் செயற்பாடுகள் பிராந்திய ரீதியாக அன்றி நாடு முழுவதும் தேசிய ரீதியில் ஒரேசமயத்திலேயே( மே 11) முன்னெடுக்கப்படும் என்று எலிஸே மாளிகை இன்று தெரிவித்திருக்கிறது.
நாட்டின் எல்லைக்குள் உள்ள பிராந்தியங்களுக்கு இடையே போக்குவரத்துச் செய்வது மே 11 ஆம் திகதிக்குப் பின்னர் தடுக்கப்படமாட்டாது.
அதிபர் மக்ரோன் இன்று நாடு முழுவதும் உள்ள நகரசபைத் தலைவர்களுடன் வீடியோ மூலம் நடத்திய மாநாட்டின் பின்னர் இத்தகவல்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
(குமாரதாஸன்)