பிரித்தானியாவில் கடந்த 11.04.2020 அன்று கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்த வேல்வீதி மயிலிட்டியைச் சேர்ந்த அழகரத்தினம் ஜீவிதன் (வயது 34) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று காலை சவுத்தோல் பகுதியில் உறவினர்களால் நடாத்தப்பட்டது.
ஜீவிதனின் தந்தை,தாய், சகோதர சோதரிகள் (அக்கா,இரண்டு தம்பிமார், தங்கை) ஆகியோர் தாயகத்தில் பருத்தித்துறையில் வாழ்கிறார்கள் எனவும் –
பிரித்தானியாவில் ஒன்றுவிட்ட இரண்டு சகோதரர்களே இறுதி நிகழ்வை நடத்தியிருந்தார்கள் எனவும் – உறவினர்கள் எமது ஊடகப்பிரிவுக்குத் தெரிவித்தனர்.
கொரோனாவின் பிடியில் உயிரிழப்பவர்கள் பலரின் இன்றையநிலை இவ்வாறுதான் உள்ளது. இந்தக் கொடுமையில் இருந்து விடுபட அனைவரும் அவதானமாக இருப்பது அவசியமாகும்.
பலர் இன்னும் கொரோனாவின் ஆபத்தை உணராதவர்களாய். விளையாட்டுத்தனமாக, சமூக இணையங்களில் கேலித்தனங்களோடு நாட்களை நகர்த்துகின்றார்கள். சமூகப் பொறுப்புணர்ந்து செயற்படுவதே சிறந்ததாகும்.
இன்று பல கற்பனைகளோடு புலம்பெயர் தேசத்தில் கால்பதித்த இந்த இளைஞன் கண்ணுக்குத் தென்படாத கொரோனாவினால் இறுதிப் பயணம் போகின்றான். அமைதியாக அனைவரும் வழியனுப்பிவைப்போம். ஜீவிதனின் ஆத்மா சாந்தியடையட்டும்.
(எரிமலையின் செய்திப் பிரிவு)