தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
வரலாறு என்றும் காணாத வகையில் கொரோனா தொற்று நோய் உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்துள்ளது. இக்கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்றும் பணியில் மருத்துவர்கள், அவர்களின் உதவியாளர்கள், சுகாதாரம் மற்றும் காவல் துறைகளைச் சேர்ந்தவர்கள் இரவுப் பகலாக ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆற்றும் பணி மகத்தானதாகும். ஒரு வார காலத்திற்கு மேல் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருக்கும் மருத்துவர்களுக்கு பிறரைக் காட்டிலும் அதிக அளவில் தொற்றுப் பாதிக்கும் வாய்ப்பு இருப்பது தெரிந்திருந்தும் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தொண்டாற்றி வருபவர்கள் மனித குல நன்மைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.
உலகெங்கும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் செய்து வந்த மருத்துவர்களில் கிட்டத்தட்ட 150-க்கும் மேலானவர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். பிற நாடுகளில் அவர்கள் மிகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் தொண்டில் உயிரிழந்த மருத்துவர்களை அடக்கம் செய்ய விடாமல் அவமதித்துக் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உலகின் முன் தமிழ்ச் சமுதாயத்தைத் தலைகுனிய வைத்துவிட்டார்கள். அத்தகையோர்களை சமூக விரோதிகளாகக் கருதி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களும் அவர்களைப் புறக்கணித்து வெறுத்து ஒதுக்க வேண்டும். அதே வேளையில் இறந்தவர்களை அடக்கம் செய்தாலோ எரியூட்டினாலோ அதன் மூலம் கொரோனா நோய்த் தொற்று பரவாது என உலக சுகாதார அமைப்புத் திட்டவட்டமாகக் கூறியுள்ள அறிவியல் உண்மையை மக்களுக்கு உணர்த்துவதற்கு உரியவற்றை அரசும் ஊடகங்களும் செய்ய வேண்டும்.
கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காக்கத் தங்களை ஒப்படைத்துக் கொண்டு அருந்தொண்டாற்றிய மருத்துவர்கள், அவர்களின் உதவியாளர்கள், மற்றும் சுகாதார, காவல் துறையினர் ஆகியோர் கொரோனாத் தொற்றினால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களை காவல் துறை அணிவகுப்பு மரியாதை செலுத்துவதோடு அவர்களின் அடக்கத்தின் போது அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசு சார்பில் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்த வேண்டும். குறிப்பாக உயிர்த் தியாகம் செய்யும் மருத்துவர்களை மாமனிதர்களாகப் போற்றி தமிழக அரசு விருது வழங்கிப் பெருமைப்படுத்த வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.