கொழும்பில் இருந்து சம்பூர் கொரோனா தனிமைப் படுத்தல் முகாமுக்கு மக்களைக் கொண்டு சென்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று (15. 04 2020) புதன்கிழமை மாலை 4.50 மணியளவில், கொழும்பு – கண்டி வீதியில் வராக்காபொல தபால் நிலையத்திற்கு அருகில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக சம்பூருக்கு நபர்களை அழைத்துச் சென்ற கடற்படையினருக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் மீது, கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் பாரவூர்தியின் சாரதி உயிரிழந்துள்ளதோடு, 29 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் கடற்படையைச் சேர்ந்த மூவர் அடங்குவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கிராண்ட்பாஸ், நாகலகங் வீதியைச் சேர்ந்த 113 பேர், புனானை மற்றும் சம்பூர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.