“நாட்டுப்பற்றாளர் நாள்’’ தாயவள் அன்னை பூபதியம்மா 33 ஆண்டுகள்!

0
730

தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நாளான இன்றைய நாளை நாட்டுப்பற்றாளர் தினமாக தமிழீழத் தேசியத்தலைமை பிரகடனப்படுத்தியிருந்தது. அன்னை பூபதி அம்மாவின் நினைவுநாளை “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்” என்றும் நினைவு கூரப்படுகின்றது .உலக வல்லரசுகளில் நாமும் ஒருவர் என்று மார்பு தட்டிக்கொள்ளும் இந்திய வல்லாதிக்க அன்றைய அரசுக்கெதிராக தமிழ் மக்களின் ஆகக்குறைந்த இரண்டு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்தும், இந்திய அரசானது தமிழ் மக்களின் மீது வைத்திருக்கும் உண்மையான நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு காட்டும் வகையிலும் அகிம்சை தேசத்திற்கு சவால் விட்டு அகிம்சையிலே போராடுவேன் என்று 1988 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் நாள் தனது உண்ணா மறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். தனது தேச மக்களுக்காகத் தாயாக நின்று காந்தியவழியில் அகிம்சைப்போர் தொடுத்த அன்னை பூபதி அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காது அவரை சாவடையச் செய்தது இந்திய வல்லாதிக்க அரசு. வெளியுலகத்திற்கும், வெளிபூச்சுக்கும் கண்துடைப்பிற்கும் அகிம்சையின் நாடானது இவ்வாறுதான் நடந்து கொள்ளும் என்று தெரிந்தும் தனது கொள்கையில் சிறிதேனும் பின் தளராது தன்னைவருத்தி ஒரு மாதங்களின் பின் தன் உயிரை மக்கள் மத்தியில் ஈகம் செய்து ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் அல்ல உலகத்தமிழர்கள் மனதில் இடம்பிடித்து அன்னை சாவடைந்து 33 ஆண்டுகளாகிவிட்டது.
தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில் இன்றுவரை சிங்களம் அடக்குமுறை என்பதையும், பாகுபாடு என்கின்ற பாதையில் தான் தொடர்ந்தும் பயணிக்கின்றது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு அரசியல் பாதையிலாவது சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு போய்விட்டது. சிங்கள பௌத்த தேசத்திலே 73 ஆண்டுகளாக நடைபெறாத, நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்து விடப்போவதுமில்லை. அதற்கு எமது மக்களும் தயாராகவில்லை.
இவ்வகையில் இன்று உலகமெங்கும் ஆட்டிப்படைக்கும் கொடிய (கொவிட்19) கொரோனா வைரசுக் கிருமியினால் சர்வதேசம் நிலைகுலைந்து போய்நிற்கும் நிலையில் கண்ணுக்கு தெரிந்த எவ்வளவோ பெரிய எதிரிகளைச் சந்திக்க கற்றுவைத்திருக்கும் எமது இனமும், மக்களும் தனது இனத்தின் பாரம்பரியத்தை, பழக்கவழக்கங்களையும் மாற்று இனத்தவர் கூட கைக்கொள்கின்ற நிலையை இன்று ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனாலும் அனைத்து உயிருக்குமே அச்சுறுத்தலாக இருக்கும் இந்த விச வைரசுக்கு பயந்து நம்மை நாமே தனிமைப்படுத்தி முடக்கிப்போட்டிருக்கின்றோமேயொழிய எமது மன எண்ணங்களை நினைவுகளையும் மூடிவைக்கவில்லை. வைக்கவும் கூடாது.
கடந்த நான்கு தசாப்தங்களாக உயிர் விலைகொடுத்த எமது போராட்டத்தில், உயிர் தியாகத்தில் பெருத்த நம்பிக்கைத் துரோகங்களையும், பெரும் நாசச்செயல்கள் என எமக்கெதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களையெல்லாம் தனித்து நின்று தகர்த்தெறிந்தது எமது தேசம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக எதிர்கொண்டனர் எமது மக்கள். அதற்கு வலுவையும் துணையாகவும் அன்னை பூபதி அவர்களின் உயிர்த்தியாகமும் ஆயிரமாயிரம் மாவீரர்களின், மக்களின் உயிர் அர்ப்பணிப்பும் பக்க பலமாக இருந்திருந்தது.
இன்று சர்வதேச பேரிடர் என உலகம் இருக்கும் நிலையில் மாற்றான் தேசத்து மக்களாகவே தமிழ்மக்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் நடாத்தப்படுகின்றனர். இலங்கைத்தீவில் பல்வேறு பாதுகாப்பு நிலையங்களும், முகாம்களும் இருக்கின்ற நேரத்தில் தமிழ்மக்கள் அதிகம் வாழும் தமிழர் தாயகப்பகுதியில் வைரசு நோய்க்கு உள்ளானவர்களை பரீட்சித்து பார்ப்பதற்கும், பாராமரிக்கும் பகுதியாகவும் ஏன் தெரிவு செய்யப்பட வேண்டும். இதனை பயத்தினால் எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழ்மக்களை மனிதகுலத்துக்கே விரோதமானவர்களாக சித்தரிக்க முற்படுகின்றது சிங்கள் பௌத்த அரசு.
கடந்த 12 வருடங்களுக்கு மேலாக தமிழ்மக்களின் துயரவாழ்வை தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது அதில் சுயலாபத்தை அடைந்து வாழ்கின்ற அரசியல் வாதிகள் ஒருபுறம், மக்களின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளும்போது தான் மக்கள் எம்முடன் இணைந்து கொள்வார்கள் என்பதையும் கொண்ட கொள்கையில் உரமாக நின்று பேரிடர்காலத்தில் அதனால் வரும் ஆபத்துக்களையும் புறந்தள்ளி மக்களுக்கு பணியாற்றும் பேரன்பு கொண்டோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இன்று தாயகத்தில்.நினைவேந்தல்களுக்கு சிங்களப் பேரினவாத அரசு தடைவிதித்துள்ள அதேவேளை,விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்வதாக பல தமிழ் இளைஞர்களையும் கைது செய்து வருகிறது.

இந்நிலையில் எமது மக்களின் விடிவிற்காய் நாம் அனைவரும் ஒருமித்து நின்று சிறிலங்கா பேரினவாத சக்திகளின் திட்டமிட்ட சதியை முறியடிப்போம் என்று எமது மக்களின் சுதந்திரமான நிம்மதியான வாழ்விற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அவர்களின் 33 ஆவது ஆண்டில் நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

குறிப்பு :- இன்றைய நாளில் (19.04.2021) ஒவ்வொரு தமிழர் இல்லங்களிலும் ஈகைச்சுடர் ஏற்றிவைத்து மனதில் உறுதியெடுத்துக் கொள்வோமாக.
“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here