மரியநாயகம் குரூஸ் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு!

0
389

சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தமிழீழ விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்டப் பிரதிநிதி திரு. ப. மரியநாயகம் குரூஸ் அவர்கள் 09.04.2020 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தன் வாழ்வுக்காலத்தில் தமிழ்மக்களின் விடுதலையில் பற்றுறுதி கொண்டிருந்ததோடு, போர்க்காலங்களிலும், போர்நிறுத்தக் காலங்களிலும் தமிழ்மக்களுக்காகத் தொடர்ந்தும் குரல்கொடுத்தவர்.

அரச பள்ளி முதல்வராகவும்இ பின்னர் ஆங்கிலமொழிக் கல்விக்கான உதவிக்கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியதோடு, தன் ஓய்வுக்காலம்வரை தமிழ்மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறைகாட்டிச் செயற்பட்டவர்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் மன்னார் மாவட்டத் தலைவராக இருந்து மக்களுக்கான அனைத்துப் பணிகளையும், முகாமைத்துவக்குழு ஊடாக திட்டமிட்டு மக்களது தொடர் இடம்பெயர்வு, மீள்குடியேற்ற வாழ்வியலை இனங்கண்டு பணியாற்றியவர். அத்தோடு மன்னார் மாவட்டத்தின் சர்வதேச, உள்ளக அரசசார்பற்ற நிறுவனங்களை உள்ளடக்கிய செயற்பாட்;டு நிறுவக இணையத்தலைவராகப் பணியாற்றியவர்.

தன்பணியினை மிகவும் கண்ணியமான முறையில்; செவ்வனே செய்த பெருமைக்குரியவர்;. போர்நிறுத்தக் கண்காணிப்பு நிலைமைகளையும், சிங்கள அரசபடையினரின் போர்நிறுத்த மீறல்களையும், எமது போராட்டத்தின் நியாயத் தன்மைகளையும் கண்காணிப்புப் பணியில் இருந்த சர்வதேச நாடுகளின் உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தியவர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிங்கள அரசபடைகளால், மீண்டும் தமிழ்மக்கள் மீது பாரியதாக்குதல்கள் தொடுக்கப்பட்டபோது, மன்னார் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை மக்கள் எதிர்நோக்கிய அத்தனை இடம்பெயர்வுகளிலும், தானும் ஒருவனாக துயரினைச்சுமந்து அவ்வப்போது மக்களுக்குத் தேவையான பணிகளைத் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் பணிப்பாளர்களுடன் இணைந்து செயற்படுத்தியவர்.

தன்நலன் கருதாது, தனக்கென வாழாது, தேசத்தையும் தேச மக்களையும் எண்ணி வாழ்ந்த இப்பெருந்தகையை இழந்து தவிக்கும் உறவினர், நண்பர்களின் பிரிவுத்துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், இவரது தேசப்பற்றுக்காகவும், தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் ”நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here