கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறன்று இன்று 21.04.2020 இதே நாளில் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் உள்ளிட்ட 3 தேவாலயங்கள் மற்றும் விடுதிகள் மீது தீவிரவாதிகளின் தாக்குதலில் அப்பாவி மக்கள் 263 பேர் உயிரிழந்தார்கள்.
தேசிய தவ்ஹித் ஜமாஅத் என்ற அமைப்பின் மூலம் சஹ்ரான் காசிம் தலைமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஷங்கரில்லா ஹொட்டலில் மொஹம்மட் ஹாசிம் மொஹம்மட் ஸஹ்ரான்,
மொஹம்மட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட்,
சினமன் கிராண்ட் ஹொட்டல் மொஹம்மட் இப்ராஹிம் இன்ஷாப் அஹமட்,
கிங்ஸ்பெரி ஹொட்டலில் மொஹம்மட் அசாம் மொஹம்மட் முபாரக்
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் அச்சி முஹம்மது மொஹம்மட் ஹஸ்துன்,
கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயத்தில் அலாவுதீன் அஹமட் முவாத்,
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மொஹம்மட் நசார் மொஹம்மட் அசாத்,
பிறிதொரு நட்சத்திர ஹொட்டலில் தாக்குதலிற்கு முயன்று, குண்டுவெடிக்காததையடுத்து தெஹிவளை, ரொபிக்கல் இன் பகுதி விடுதி அறையில் குண்டை சோதனையிட்டபோது அப்துல் லத்தீப் ஜமீல் மொஹம்மட் ஆகியோர் நேரடி தாக்குதல்தாரிகளாக உயிரிழந்தனர்.
குண்டுவெடிப்பையடுத்து துரிதகதியில் செயற்பட்ட பொலிசார் ஷங்கரி லா ஹொட்டலில் கிடைத்த தடயப்பொருள் ஒன்றை அடிப்படையாக கொண்டு, மஹவில கார்டன், பேஸ்லைன் வீதி, தெமட்டகொடையிலுள்ள பிரபல வாசனைத்திரவிய வர்த்தகர் இப்ராஹிம் ஹாஜியாரின் வீட்டுக்கு சென்றபோது, பாத்திமா இல்ஹாம் என்ற பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் குண்டை வெடிக்க வைத்தார். இவர் ஷங்கரில்லா தாக்குதல்தாரியான இல்ஹாம் அஹமட்டின் மனைவியாவார்.
ஒன்பது தற்கொலைதாரிகள் ஏற்படுத்திய பேரனர்த்தம் இது.
இந்த தாக்குதல்களில் காயமடைந்த சிலர் இன்னும் வைத்தியசிகிச்சையில் உள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக விசாரணைகளில் இதுவரை 197 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக அண்மையில் காவல்துறை ஊடக செய்தித் தொடர்பாளர் எஸ்.பி. ஜாலியா சேனரத்ன தெரிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, பிறிதொரு தாக்குதலிற்கும் இந்த குழு திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளின் மனைவிமார், பெற்றோர், சகோதரர்கள் அடங்கிய குழுவினர் சாய்ந்தமருது, வெலிவேரியன் கிராமத்தில் பதுங்கியிருந்தபோது, அடையாளம் காணப்பட்டனர். 15 பேர் அந்த மோதலில் கொல்லப்பட்டனர்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாளில் தேவாலயங்களில் ஆராதனையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் நடந்திருந்தது.
தாக்குதலில் உயிர்நீத்தவர்களிற்காக வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலிக்குமாறு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கொடூரம் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் ஆகின்றது. உயிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.