இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவதிப்படுகிறார். இவருக்கு இன்று உடனடியாக மனோ வைத்தியம் தேவைப்படுகிறது. நாட்டின் எந்த பகுதியிலும் இன்று பறக்காத புலிக்கொடிகளை பறப்பதாக இவர் கூறுகிறார். இது இன்று இவர் கண்களுக்கு மாத்திரம் தெரிகிறது. 19ம் திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறைக்கப்பட்டதை தவிர வேறு எதுவும் கிடையாது என்றும் இவர் கூறுகிறார். அங்கே நாம் உருவாக்கியுள்ள பதினோரு சுயாதீன ஆணைக்குழுக்களும் இவருக்கு தெரியவில்லை.
சிங்கள மக்கள் மத்தியில், தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டிவிட்டு ஆட்சியை பிடிக்கலாம் என்று மகிந்தர் கனவு காண்கிறார். ஆகவே பதவி ஆசை பித்து பிடித்து போய் நமது இந்த ஆட்சி மாறவேண்டும் என்று இவர் சொல்கிறார். நமது அரசாங்கம் ஒரு பொலிஸ் ராஜ்யத்தை உருவாக்கியுள்ளது என்று மகிந்தவுடன் சேர்ந்து அவரது சகோதரர் கோதாபய ராஜபக்ச சொல்கிறார். கடந்த ஆட்சியின் போது வெள்ளை வான் பொலிஸ் ராஜ்யத்தை தலைமை தாங்கி நடத்திய கோதாபய, இன்று நமது மைத்திரி ஆட்சியை பார்த்து, பொலிஸ் ராஜ்யம் என்று சொல்வதை கேட்டு நாம் வாய்விட்டு சிரிக்கின்றோம். இந்த நேரத்தில் வாசுதேவ நாணயக்கார நமது பக்கத்தில் இல்லையே என நான் கவலையடைகிறேன். வாசுதேவ நாணயக்கார எங்கள் பக்கம் இருந்திருந்தால், மகிந்த சகோதரர்களுக்கு உரிய பதிலை, உரிய சுந்தரமான சிங்கள சொற்களை பாவித்து அவர் அளித்திருப்பார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.