கொரோனாவினால் உலகமே தனது இயல்பு வாழ்வியலை ஒறுத்து முடங்கிக் கிடக்கும் நிலையில் பறவைகளும் விலங்குகளும் மனிதர்களின் ஆக்கிரமிப்புக் காரணமாக கடந்த காலங்களில் இழந்துவிட்ட தமது இயல்பு வாழ்க்கையை குதூகலமாக ஆரம்பித்துள்ளன.
தமிழர் தாயகத்தின் யாழ். குடாவில் காரைநகர் வீதி 785 வழித்தடத்தின் நவாலிப்பகுதி கண்டல் வெளியில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை (வலசை போதல்) தற்போது அதிகரித்துள்ளது.
அவை மகிழ்ச்சியாகக் குதூகலிப்பதை வீட்டினுள் முடங்கிக் கிடந்த மனிதர் ஒருவர் படம்பிடித்து இணையத்தில் உலவ விட்டுள்ளார்.
இந்தியாவில் வேடந்தாங்கல் பகுதியில் இவ்வாறான வெளிநாட்டுப் பறவைகளின் வருகை நிகழ்வு வருடந்தோறும் நடைபெறுவது வழமையே.
ஆனால், தமிழீழத்திலும் இந்தியாவிலும் அரியவகை விலங்கினங்கள், பறவைகள் எல்லாம் மனிதர்களின் முடக்கம் காரணமாக வெளியில் வர ஆரம்பித்துள்ளன.
இவை தொடர்பான அதிசய புகைப்படங்கள் காணொளிகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவிவருகின்றமை தெரிந்ததே.
இனிவரும் காலங்களில் மனிதர்கள் இயற்கையின் பல்வேறுபட்ட அதிசயங்களை காணும் வாய்ப்புகள் உள்ளதாக உலக ஆய்வியலாளர்கள் கருத்து வெளியிட்டுவரும் நிலையில் இச்செய்தியும் வெளியாகியுள்ளது.
பிரான்சில் அண்மையில் இரண்டு திமிங்கிலங்கள் கரையை அண்மித்து பல சாகசங்களை நிழ்த்திச் சென்றமை நினைவிற்கொள்ளத் தக்கது.
(எரிமலைக்காக ஊடகன்)