பொல்லாத காலனவனின்
கொடுஞ்செயலை என்னவென்று சொல்ல…!
சொந்த ஊரில இருந்து
கொடிய போர் விரட்டியது;
ஈவிரக்கமின்றி
சொந்த நாட்டிலேயே
அகதிகளாக்கியது எமை!
சொந்த ஊர்விட்டகன்றதனால்
ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட
புலம்பெயர்வே கதியாச்சு!
எம்மை அழித்தொழிக்க
குண்டுகொடுத்த நாடுகள்
அகதிகளாகக் கூட ஏற்க மறுத்து
வஞ்சகம் செய்தது!
ஆம், தசாப்தம் கடந்த
புலம்பெயர்விலும் நிம்மதியில்லை;
பெற்றவரையும்
உற்றவரையும்
உடன்பிறப்புகளையும்
கண்ணாலே காணாது
ஒரு வார்த்தைகூட பேசாது
மூச்சிரைத்து கிடந்தானே
லண்டன் மருத்துவமனையில்!
எப்படியும்
மீண்டு வருவாய் என
நம்பியிருந்த எமை
ஏமாற்றிவிட்டாயே!
நெஞ்சமதில் சுமந்த
ஏராளம் கனவுகளை
காலாவதியாக்கியது
உந்தன் மரண சேதி!
பொல்லாத காலனவன்
கொரோனா வடிவில் வந்தானே;
எல்லோரையும் கண்ணீரில்
மூழ்கடித்து
எங்கள் ஜீவிதனின் உயிர்தனை
கவர்ந்தானே!
உயிரதனை
எடுத்ததுதான் எடுத்தான்
உயிரற்ற கூட்டையுமல்லவா
எம்மவர் கண்ணில்கூடப் படாது
பறித்தெடுத்துச் சென்றுவிட்டானே!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
மீளாத்துயருடன்….
இரா.மயூதரன்
12/04/2020