பிரித்தானியாவில் யாழ். மயிலிட்டி இளைஞர் ஒருவர் இன்று 11.04.2020 சனிக்கிழமை கொரோனா தொற்றின் கோரத்துக்குப் பலியாகியுள்ளார்.
வேல்வீதி மயிலிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் (வயது 34) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இவர் யாழ் ஹாட்லிக் கல்லூரியின் (உயர்தரம் 2005) கணிதப்பிரிவு மாணவனுமாவார்.
கடந்த ஒரு கிழமைக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான அவருக்கு, லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.
கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கைச் சுவாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இரு தினங்களுக்கு முன்பாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லண்டனுக்கு அகதி தஞ்சம் கோரி சென்று பத்து ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் தற்போது அவரது அகதிக் கோரிக்கை ஏற்கப்பட சாதகமாக இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என அவரது உறவினர்கள் எரிமலை ஊடகத்திற்குத் தெரிவித்தனர். இதேவேளை, அவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வசித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
(எரிமலையின் விசேட செய்தியாளர்)