பிரித்தானியாவில் சாவடைந்த தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஆனந்தவர்ணனுக்கு ஓவியர் புகழேந்தி ஐயா அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழீழத்தில் 2005 ஆம் ஆண்டு என்னுடைய ‘புயலின் நிறங்கள்’ ஓவியக் காட்சியை இயக்கம் நடத்திய பொழுது பூநகரியில், 24.05.2005 அன்று பூநகரி மகா வித்யாலயத்தில் நடைபெற்றது. அப்போது திரு. பொன். தில்லைநாதன் அவர்கள் அதன் முதல்வராக இருந்தார். அவர் மிகவும் ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் தன்னை ஓவியக் காட்சிப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டதோடு, வருகின்ற பார்வையாளர்களுக்கும் என்னுடன் நின்று வழிநடத்தினார். அன்று நாள் முழுவதும் என்னுடன் இருந்து அக்கறையோடு என்னைக் கவனித்துக் கொண்டார். மிகச் சிறந்த தேசிய உணர்வாளர். பற்றாளர். பன்முக ஆற்றலாளர்.
லண்டனில் 09.04.2020. அன்று கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த ஆனந்தவர்ணன் (வயது 30) திரு. பொன். தில்லைநாதன் அவர்களின் மகன் என்பதை அறிந்து மிகவும் வேதனையுற்றேன். மிகவும் வலியைத் தருகின்ற செய்தியாக இருந்து.
பிரான்சில் குறுகிய காலத்திலேயே நிரந்தர குடியுரிமை பெற்று, நோர்வேயில் வசித்து வந்துள்ள நிலையில் தற்போது அவசிய காரணத்தால் இலண்டன் சென்ற நிலையிலேயே இவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி இறந்துள்ளார்.
மிகச் சிறந்த ஊடகவியலாளராக விளங்கியிருக்கிறார். ஓர் ஊடகவியலாளரின் இழப்பு தமிழ் இனத்திற்கும், சமூகத்திற்கும் பேரிழப்பாகும்!
இவரது இழப்பினால் தவிக்கும் அய்யா பொன். தில்லைநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் ஊடகத்துறை தோழமைகள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!
ஓவியர் புகழேந்தி.
10.04.2020