பாஜக கூட்டணியிலிருந்து விலகியது மதிமுக!

0
265
vaikospech-6600வைகோ தலைமையில் மதிமுகவின் உயர் மட்ட குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக மதிமுக அறிவித்துள்ளது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த போதும், இலங்கைத் தமிழர் விவகாரம், ராஜபக்சேவுடனான மத்திய அரசின் நெருக்கம், தமிழக மீனவர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் தொடர்ந்து மத்திய அரசை மதிமுக விமர்சித்து வந்தது.மோடியை விமர்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வைகோ பாதுகாப்பாக நடமாட முடியாது, வீடு திரும்பமுடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துப் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜாவின் பேச்சுக்கு திமுக தலைவர் கருணாநிதி முதல் பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இது ஒருபுறம் இருக்க, பாஜக தலைவர் சுப்பிரமணியசாமியின் சர்ச்சைப் பேச்சுக்களை கட்சித் தலைமையிடம் கண்டிக்காமல் இருப்பதும் மதிமுகவை கோபத்தில் தள்ளி உள்ளது. எனவே, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் படி வைகோவை கட்சித் தொண்டர்கள் வற்புறுத்தி வருவதாக கூறப்பட்டது.இந்தச் சூழ்நிலையில் இன்று சென்னையில் உள்ள மதிமுக தலைமைக் கழக அலுவலகமான, தாயகத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்களின் உயர்மட்ட குழு கூட்டம், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.
இன்று காலை தொடங்கிய கூட்டத்தில், கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது.உயர்மட்ட குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, பாஜக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here