தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலையினை பல்லின மக்களுக்கும் கனடிய அரசாங்கத்திற்கும் எடுத்துப் போகும் முயற்சிகளில் இதுவும் ஒன்று. ஈழத் தமிழர்களுக்கு நடைபெறும் தொடரும் இனவழிப்பை நிறுத்தவும், நடந்து முடிந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டியும், இனவழிப்பு மாதத்தின் ஒரு நிகழ்வாக இந்த நடைபயணம் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.
திகதி: ஞாயிறு மே. 31 2015
நேரம்: அதிகாலை 10 மணியில் இருந்து 1 மணிவரை
இடம்: John Daniels Park – Markham (North-West corner of Markham Rd & Steels Avenue)
இந்த நூற்றாண்டின் மிகக் கொடிய இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நடந்தேறி 6 ஆண்டுகள் ஆன நிலையிலும் உலகம் அதனை இனப்படுகொலை என உச்சரிக்க தயங்கும் காலங்களை மாற்றும் வகையில் இப்படியான முயற்சிகள் உலகுக்கு ஒரு வலிமையான செய்தியை கூறும் என கனடிய தமிழர் தேசிய அவை உறுதியாக நம்புகின்றது.
கனடாவில் மார்க்கம் நகரில் உலகில் முதன் முதலாக எங்கள் மண்ணில் நடைபெற்றது இன அழிப்பு எனத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மாநாட்டில் பல நாடுகளிலிருந்தும் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களால் நிறைவேற்றப்பட்ட இன அழிப்புத் தீர்மானத்தை தொடர்ந்து இத்தாலியில் பலர்மோ மாநகரசபையிலும்இ தமிழக சட்ட சபையிலும் தமிழின அழிப்பு வலியுறுத்தப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழ மண்ணின் மக்கள் சமூகத்தால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை இத்தீர்மானத்தை நிறைவேற்றியமை எம் இனத்தின் மக்கள் போராட்டம் வலுப்பெற வாய்ப்பளித்துள்ளது. தொடர்ந்தும் நிலமும் புலமும் உலக மாந்த நேயமும் நீதி வேண்டி இப் போராட்டத்தில் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் என்ற நம்பிக்கையுடன் இப்போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். இந்த நடைபயணத்தில் தங்களையும் இணைத்துக்கொண்டு நீதிக்கான பயணம் வெற்றி பெறுவதற்கு உதவி புரியுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலை பேசி: 416.830.7703 | மின்னஞ்சல்: info@ncctcanada.ca | முகநூல் @ncctonline