“அன்புக்குரியவர்களை அவர்களது கடைசி தருணங்களில் சென்று பார்க்கவோ அருகில் இருந்து கவனித்துக் கொள்ளவோ முடியாத இன்றைய கால சூழ்நிலை பெரும் துன்பகரமானது” என்று தெரிவித்திருக் கிறார் முன்னாள் அரசுத் தலைவர் பிரான்ஸுவா ஹொலன்ட்.
ஹொலன்டின் தந்தையார் தனது 96 ஆவது வயதில் மூதாளர் காப்பகம் ஒன்றில் உயிரிழந்துள்ளார்.அவரது மரணத்துக்கு வைரஸ் தொற்று காரணம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் நகரில் உள்ள காப்பகம் ஒன்றில் சனிக்கிழமை மரணமடைந்த தனது தந்தையாரை நாட்டில் தற்போது எல்லோருக்கும் பொதுவாக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளின் படி தன்னால் சென்று பார்க்க முடியவில்லை என்று கவலை வெளியிட்டிருக்கிறார் ஹொலன்ட்.
“அன்புறவுகள் நம்மை விட்டுப் பிரிகின்ற முக்கியமான வேளையில் அவர்களை அருகிருந்து பார்க்க முடியாத சூழலுக்குள் நாமெல்லாம் இருக்கின்றோம். நானும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் என்னை உட்படுத்திக் கொண்டுள்ளேன். தொலைபேசியில் உரையாடினேன். போய் அவரை நேரில் பார்க்க முடியவில்லை “
” தற்போதைய சூழலில் இறுதி நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதில் தாமதங்கள் உள்ளன. அவரது உடலைப் பெற்று மலர்ச்சாலை ஒன்றில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும்போது அவரைப் பார்வையிட முடியும் என்று காத்திருக்கிறேன். “
இப்படி முன்னாள் அரசுத் தலைவர் தனது வருத்தத்தை ஊடகம் ஒன்றிடம் தொலைபேசி வழியாக வெளியிட்டார்.
நெருக்கடியான சூழலில் மூதாளர் காப்பகங்களிலும் பராமரிப்பு நிலையங்களிலும் வேறு முக்கிய பல துறைகளிலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருவோருக்குத் தனது நன்றிகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.
அவரது தந்தையாரது இறுதி நிகழ்வுகள் இன்று நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
(குமாரதாஸன்)