பிரான்சில் சில பகுதிகளில் குழாய் நீரில் குளோரினின் அளவு அதிகரிக்கப்பட்டி ருக்கின்றது. இதனால் பதற்றமடைய வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
நீரின் தன்மை வழமைக்கு மாறாக இருப்பது குறித்து பாவனையாளர்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் நீரை அருந்துவதால் எந்தப்பாதிப்பும் ஏற்படாது எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடையத் தொடங்கியதில் இருந்து பல நகரசபைப்பிரிவுகளில் குழாய் நீரில் குளோரின் அளவு அதிகரிக்கப்பட்டது. நீரின் ஊடாக வைரஸ் தொற்று ஏற்பட பெரிதும் வாய்ப்பில்லை என்று உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆயினும் சுத்திகரிப்புக்குப் பயன்படும் நீரில் குளோரினின் அளவு அதிகம் இருப்பது தற்போதைய சூழ்நிலையில் பொதுச் சுகாதாரத்துக்கு நன்மை பயக்கும் என்று நீர் வழங்கலுக்குப் பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குளோரின் கலந்த நீரில் கைகளை கழுவுவது வைரஸ் பரவலை மேலும் குறைக்கும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாரிஸ் பிராந்தியத்தின் மேற்குப் பகுதி, துளுஸ்(Toulouse) , ஸ்ரார்ஸ்பூ( Strasbourg) பிராந்தியங்களில் இவ்வாறு நீரில் குளோரின் அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது.
–குமாரதாஸன்.