நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள் இறுதிக்கணம் வீரவரலாற்றின் வீரத்தளபதிகள் மற்றும் இறுதிப்போரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நினைவு கூருகின்றோம் ……..
ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு
வன்னியில் போர் உக்கிரமம் பெற்ற காலப்பகுதிகள் ஒவ்வொரு நாளும் மக்கள் படுகொலைகளும் போராளிகளின் வீரச்சாவும் அன்று நடந்தேறிக்கொண்டிருந்தன. இவை தமிழ் மண்ணின் வரலாறுகளாக அன்று காணப்பட்டன.
அதன் நினைவுகளை மீட்டிப்பார்க வேண்டிய தேவை தமிழ் மக்கள் அனைவருக்கும் ஒர் கடமை. அந்தவகையில்தான் கிளிநொச்சியினை விட்டு பின்னகர்ந்த மக்களும் விடுதலைப்புலிகளும் இறுதியான தாக்குதல்களை எதிரிமேல் தொடுத்தவண்ணம் எதிரிக்கு பாரிய இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டார்கள்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தின் இறுதிக்கட்டமாக ஆனந்தபுரம் பகுதி அமைகின்றது. புதுக்குடியிருப்பின் வடகிழக்கில் உள்ள பகுதியாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. இந்த இடத்தில்தான் விடுதலைப்புலிகளின் நெருப்பாற்று தாக்குதல்கள் தீச்சுவாலைகளுக்கும் மத்தியில் இடம்பெற்றன.
தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் ஆனந்தபுரத்தினை விட்டு பின்னகரமாட்டேன் என்பதற்கு இணங்க சில நேரடி கட்டளைகளை வழங்கிகொண்டு இருந்தார். தலைவர் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் விடுதலைப்புலிகளின் மகளிர் படைஅணிகளும் அதன் பிரிகேடியர்களும் கேணல், மற்றும் லெப்ரினன் கேணல் நிலை அதிகாரிகளும் களமுனையில் நேரடியாக நின்றார்கள்.
இதேபோன்றுதான் ஆண் போராளிகளின் கட்டளைத் தளபதிகளும் பிரிகேடியர்களும் கேணல்களும், லெப்ரினன் கேணல் நிலையுடைய போராளிளும் சகபோராளிகளுடன் நின்று களமாடினார்கள். இவர்களின் வீரவரலாறுகள் ஆனந்தபுரம் மண்ணில் பதிந்து பதின்நொராம் ஆண்டாகின்றது. இந்த விடுதலை வீரர்களின் தியாக உணர்வுகளுக்கு மதிப்பளித்து,
அன்று ஆனந்தபுரம் மண்ணில் எமது தேசியத்தலைமையினை பாதுகாத்து மாவீரர்களான போராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், பிரிகேடியர்களை நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.
இந்நிலையில் அன்று சிறீலங்காப்படையினரின் கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு, இரசாயன குண்டு மழைக்குள் நின்று களமாடி மாவீரர்களான வீரர்களையும் அன்றைய காலகட்டபகுதியில் உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவிற்கொண்டு இம்மாவீரர்களின் ஈகைக்களுக்கு மதிப்பளித்து தொடர்ந்தும் ஈழவிடுதலை பணியினை மேற்கொள்வோம்.
ஆனந்தபுரம் ஒரு வீரவரலாறு
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது.
அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர்.
அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது.
தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர்.
விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது.
விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள்.
அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன.
தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள்.
இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள்….
◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌◌