பிறப்பு :- 31.12.1970 வீரமரணம் :- 04.04.2009
சொந்தமுகவரி -தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
படித்த பாடசாலைகள் :-
யா/ தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்,
ஹாட்லிக்கல்லூரி
இம்மாவீரன் நாட்டுப்பற்றாளர் குமாரவேல் அழகரத்தினம் அவர்களின் மகனும்.
1.மேஜர் யாழ்வேந்தன் /சங்கர் / அரவிந்தன் (அழகரத்தினம் அரவிந்தன் )
2.மேஜர் தாகூர் /சங்கர் ( அழகரத்தினம் ரவீந்திரன் ),ஆகிய மாவீரர்களின் சகோதரனும் ஆவார்.
சம்பவம் :- ஆனந்தபுரம் , புதுக்குடியிருப்பு பகுதியில் போராளிகளை வல்வளைத்த ஸ்ரீலங்கா பேரினவாத இராணுவத்துக்கெதிரான நேரடியுத்தத்தின்போது
இயல்பாகவே அமைதியான சுபாபமும், கனிவான பேச்சும் நிறைந்த மணிவண்ணன், போர்க்களங்களில் புயலாக மாறிவிடுவார். பல போர்க்களங்களைச் சந்தித்து விழுப்புண் அடைந்த போதிலும் போர்க்குணம் மிக்க வீரனாகவே செயற்பட்டார். களநிலவரங்களை உடனுக்குடன் புரிந்துகொண்டு மோட்டார் செல்களை விரையப்படுத்தாமல் சரியான இலக்குக்கு செல்களை அடிக்க கட்டளைகள் பிறப்பிப்பார். “வருகுது பார் “என மணிவண்ணன் களத்தில் உள்ள தளபதிகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் போது களத்தில் போரிடும் போராளிகளின் மகிழ்ச்சியைப் பார்க்கவே தேவையில்லை. போர்க்களங்களில் இறுக்கமான சூழ் நிலைகளிலெல்லாம் மணிவண்ணனைத்தான் போராளிகள் தேடுவார்கள். பல இறுக்கமான இடங்களில் எல்லாம் செல்களை விழுத்தி தடைகளை உடைத்து பல வெற்றிகளுக்குக் காரணமாய் இருந்தவர் மணிவண்ணனும் அவருடைய போராளிகளும் தான்.
கேணல் ராயு அவர்களால் வழிநடத்தப்பட்ட மணிவண்ணன், கேணல் ராயு அவர்கள் வீரச்சாவடைந்த பின்னர் ராயு அவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி, சிறப்பாக, மோட்டார் படையணியை வழிநடத்தினார். அனைவருடனும் அன்பாகப் பழகும் மணிவண்ணன் அவர்கள் எளிதில் அனைத்துப் போராளிகளின் மனதிலும் இடம் பிடித்து விடுவார். அனைவராலும் “மணியண்ணை ” என அன்பாக அழைக்கப்படும் தளபதியாவார்.
ஆனந்தபுர பெருஞ்சமரில் செல்களை சரியான முறையில் சரியான இலக்குகளில் பயன்படுத்தி எதிரிகளைக் கொன்று குவித்தவர்.வீரச்சாவடையும் தருணத்தில் அவரும் அவருடைய போராளிகளும் இணைந்து எதிரியிடம் பிடிபடாதபடி களத்தில் தன்னுடன் வைத்திருந்த ஆட்டிலெறி பீரங்கிகளைத் தகர்த்து அழித்துவிட்டு அன்னை மண்ணை முத்தமிட்டார் பிரிகேடியர் மணிவண்ணன்.