உணவு மற்றும் மரக்கறி, பழவகைகளை மொத்தமாக சந்தைப்படுத்தும் marché de Rungis சந்தையின் பிரதான களஞ்சியக் கட்டடம் ஒன்று சடலங்களைப் பாதுகாக்கும் பிரேத சாலையாக மாற்றப்படுகிறது.
Val-de-Marne இல் அமைந்திருக்கும் இந்தக் களஞ்சியம் பாரிஸ் பிராந்தியத்துக்கான அவசரகால சவச்சாலையாகவும் அந்திம சேவைகளை வழங்கும் நிலையமாகவும் அடுத்த வாரம் முதல் இயங்கும் என்று பொலிஸ் பணியகத்தை ஆதாரம் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 4ஆயிரம் சதுரஅடி இடவசதி கொண்ட மூடிய, குளிரூட்டப்பட்ட பாரிய களஞ்சியம் இதுவாகும்.
பாரிஸ் பிராந்தியத்தில் கொரோனா மரணங்கள் வேகமாக அதிகரித்து வருவதால் ஆஸ்பத்திரிகளின் பிரேத சாலைகளில் உருவாகக் கூடிய இட நெருக்கடிகளைக் கவனத்தில் கொண்டு இந்த மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது. தகனம் அல்லது அடக்கம் செய்வதற்கு முன்னர் சடலங்களை வைத்துப் பேணவும் அந்திம கால சேவையினருடன் உறவினர்கள் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளைக் கவனிக்கவும் அங்கு வசதி செய்யப்படும் என்று பிரதேசத்துக்கான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள பிரதான மருத்துவமனைகளுக்கு வெளியே நடமாடும் பிரேத அறை வசதி கொண்ட பாரிய வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருக்கின்றன என்ற தகவலை ‘பரிஷியன்’ ஊடகம் வெளியிட்டுள்ளது.
(நன்றி:குமாரதாஸன்)