பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வண. கலபொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர் 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் பத்து இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோத்தாபய ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர்கள். பிக்குமார் அடங்கலான குழுவினர் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட் டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு விதித்தும் அதை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் ஐ. ம. சு. மு. பாராளு மன்ற உறுப்பினர்கள். முருத்தொடுவே ஆனந்த தேரர், ஞானசார தேரர் அடங்கலான 27 பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
நீதிமன்ற அழைப்பாணையை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலான 27 பேரையும் கொழும்பு பிரதம நீதவான் இஹான் பிலபிடிய பிணையில் விடுதலை செய்தார். நீதிமன்றத்தில் ஆஜராகாத பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
அவர் வெளிநாடு சென்றிருந்ததால் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. கறுவாத் தோட்டப் பொலிஸார் இது தொடர்பான உத்தரவை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ¤க்கு அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாடு திரும்பிய கலபொட அத்தே ஞானசார தேரர் நேற்றுக் காலை குறுந்து வத்தை பொலிஸில் ஆஜரானார். இவரைக் கைது செய்த பொலிஸார் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
இதன்போது சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்த பிரதம நீதவான் இஹான் பிலபிடிய வழக்கு விசாரணையை ஜுலை 13 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
சந்தேக நபரான ஞானசார தேரர் நாட்டில் இருக்காததால் அவர் நாடு திரும்பியதும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
சந்தேக நபரை நீதிமன்ற சிறை கூண்டில் நிறுத்தாது பொலிஸ் சோதனை சாவடியில் நிறுத்தியது குறித்து நீதவான் பொலிஸாருக்கு தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.