*உள்ளிருப்பில் இருந்து மக்களை விடுவிக்கும் செயற்பாட்டை எப்படி முன்னெடுப்பது என்று அரசு ஆலோசித்து வருகின்றது. இது தொடர்பாக கைக்கொள்ளக்கூடிய பாதுகாப்பான உத்திகளை பல குழுக்கள் ஆராய்ந்து வருகின்றன.
*நாட்டுமக்கள் அனைவரையும் அனைத்துப் பிராந்தியங்களிலும் ஒரேசமயத்தில் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கும் பொதுவான முடிவாக அது இருக்காது.
-பிரதமர் எத்துவா பிலிப் நாடாளுமன்றத்தில் இன்று இதனைத் தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய சுகாதார அவசரகால சூழ்நிலையில் நாட்டின் உண்மை நிலைவரத்தைக் கண்டறியும் நாடாளுமன்றக் குழுவினரின் (fact-finding mission) கேள்விகளுக்கு பிரதமரும் சுகாதார அமைச்சரும் கூட்டாக இன்று பதிலளித்தனர்.
பிரான்ஸ் முழுவதும் மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்திருக்கும் உள்ளிருப்புக் காலம் ஏப்ரல் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அது மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கப்படலாம் என்றே எதிர்வுகூறப் படுகின்றது.
உள்ளிருப்பின் அவசியத்தைப்புரிந்து கொண்டு வீடுகளுக்குள் தங்களை முடக்கிக் கொண்டவர்கள்தான் தற்சமயம் அதிலிருந்து வெளியேறுவது எப்போது என்பதைக் கற்பனை செய்கின்றார்கள். இத்தகையவர்களின் மனநிலையை அடிப்படையாகக் கொண்டு பிரதமரிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டன.
‘வைரஸ்ஸுக்கு எதிரான ஒரு போர் இது. முன்னர் எதிர்கொள்ளாத ஒன்று. எழுத்து மூலமான செயற்றிட்டங்களோ, சரி என்று நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளோ நம்மிடம் இல்லை.. தவறான முடிவுகளை, தப்பபிப்பிராயங்களை, அதிருப்திகளை வெளிப்படுத்தக் கூடிய இந்த சிக்கலான போரில் அரசு தனது பிரஜைகளுக்கு எதனையும் ஒளிக்க விரும்பவில்லை. ஆனால் எங்களுக்கு எல்லாம் தெரியாது. எல்லாக் கேள்விகளுக்கும் எங்களிடம் விடைகள் இல்லை. ‘
இவ்வாறு பிரதமர் தனது பதிலில் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் உயர்தரப் பரீட்சைகள் (baccalaureate) பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,’ சாதாரண சூழ்நிலையில் நடத்துவது போன்று இந்த முறை இந்தப் பரீட்சைகளை முன்னெடுக்க முடியாது. நம்மிடம் பல தெரிவுகள் உள்ளன. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’ என்றார் பிரதமர்.
இதேவேளை – அடுத்து வரும் நாள்களில் தொடங்கவிருக்கும் இளவேனில்கால பள்ளி விடுமுறையை தற்போது போன்று தனித்திருந்து வீடுகளுக்குள்ளேயே கழிக்க வேண்டும் என்றும், இந்தக் காலப்பகுதி விடுமுறையில் சுற்றுலா செல்வதற்காக வெளியே வருகின்ற காலம் அல்ல என்றும் உள்துறை அமைச்சர் தெளிவுபடுத்தி யுள்ளார்.
இக்காலப்பகுதியில் மக்களின் நடமாட்டங்கள் மேலும் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
(குமாரதாஸன்)