யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புபட்ட குற்றவாளிகளுக்கு விசேட நீதிமன்றம் மூலம் உச்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்துக்கு நேற்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட அவர் அங்கு நிலைமைகளை ஆராய்ந்ததுடன் இத்தகைய சம்பவங்கள் நாட்டில் இனி ஒருபோதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன தனது விஜயத்தின் போது வடபகுதி பாடசாலை மாணவர்களை சந்தித்தார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் 17 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த சந்திப்பில் இணைந்திருந்தனர்.
யாழ் குடாநாட்டில் தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படும் போதைப் பொருள் பாவனை தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனைக் கவனத்திற்கொண்ட மைத்திரிபால பாதுகாப்புப் படையினருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வடக்கு ஆளுநரின் அலுவலகத்திற்கு வித்தியாவின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு கலந்துரை யாடல்களை மேற்கொண்டார்.
அதன்போது குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு தண்டனையினை வழங்குவதாகவும் வித்தியாவின் கொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் பெற்றோரிடம் அவர் உறுதியளித்துள்ளார்.
வித்தியாவின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வடக்கு முதல்வரின் ஊடாக தெரியப்படுத்துமாறும் அவற்றை பெற்றுத்தர தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித் துள்ளார்.