நண்பர்களே,
கடந்த மூன்று நாட்களாக கொரோனா அறிகுறிகளை எனது உடலில் கொண்டிருப்பவன் என்ற வகையில் இந்தப் பதிவை மேற்கொள்கிறேன்.
சலரோகம், இருதயப் பலகீனம், தொய்வு போன்ற நோய்கள் எனக்கு இல்லை என்பதாலும், எனக்கு இப்பொழுது தான் 40 வயது என்பதாலும் நான் நிச்சயம் மரணிக்கப் போவதில்லை. இதனால் தான் கொரோனாவோ அல்லது அதன் அறிகுறிகளைக் கொண்ட நோயோ என்னைத் தாக்குவதைப் பற்றி நான் முதலிலேயே கவலைப்படவில்லை.
அதை விட இஞ்சி, உள்ளி, மஞ்சள், orange, வாழைப்பழம், கொத்தமல்லி போன்றவற்றையும் உறைப்பான உணவுகளையும் நான் தாராளமாகப் பயன்படுத்தினேன். ஒவ்வொரு நாளும் Vitamin C, Zinc போன்ற நோயெதிர்ப்புக் குளிகைகளையும் விழுங்கினேன். Zinc உடைய முட்டை போன்றவற்றை உட்கொண்டேன். தாராளமாகப் பச்சை மரக்கறிகளை உண்டேன். நாள்தோறும் இரசம் குடித்தேன்.
இதை விட Kung Fu, நடத்தல், ஓடுதல் போன்ற உடற்பயிற்சிகளை அடிக்கடி செய்தேன்.
அப்படியிருந்தும் கடந்த மூன்று நாட்களாக கொரோனா அறிகுறிகள் என்னை வாட்டி வதைக்கின்றன.
வெள்ளிக்கிழமை முழுவதும் வரட்டு இருமல் (dry cough). உடல் நோவு. காய்ச்சல் உணர்வு. ஒரு வித களைப்பு. சனிக்கிழமை இவற்றொடு பசியின்மை. தலையிடி. இன்று ஞாயிற்றுக்கிழமை கடும் காய்ச்சல். உடல் நோவு. தலைப் பாரம். மூக்கடைப்பு. உணவில் சுவை தெரியவில்லை. இடையிடையே வரட்டு இருமல். படுத்தாலும் நாரி நோகின்றது. இருந்தாலும் நாரி நோகின்றது. என்புகள் விண் விண்ணெண்று உளைகின்றன. சலம், மலம் கழிந்த பின் உபாதைகள் சற்றுக் குறைகின்றன. 6 மணிநேரத்திற்கு ஒரு முறை paracetamol போடும் பொழுது ஓரளவு சுகமாக இருந்தாலும் நான்கு மணிநேரத்தில் மீண்டும் உடல் உபாதைகள் மிக மோசமாக வாட்டி வதைக்கின்றன.
இப்பொழுது விடயத்துக்கு வருகிறேன். கொரோனாவில் இருந்து தப்புவதாயின் 5 வழிகள் தான் உள்ளன:
1) வெளியில் செல்ல வேண்டாம்.
2) வெளியில் சென்றால் 2 meters இடைவெளியைப் பேணுங்கள்.
3) வெளியில் சென்றால் உங்கள் கண், காது, மூக்கு ஆகியவற்றைத் தொடாதீர்கள்.
4) வீட்டிற்கு வந்ததும் சவர்க்காரம் போட்டுக் கையைக் கழுவுங்கள்.
5) கொண்டு வந்த பொருட்கள் அனைத்தையும் sanitiser கொண்டு சுத்தப்படுத்துங்கள்.
6) முதியவர்கள், சலரோகம், இருதயப் பலகீனம் போன்ற பிணிகள் உடையவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் உயிர்களைப் பறிக்காதீர்கள்.
இதை விடுத்து நீங்கள் வேறு என்ன செய்தாலும் கொரோனா உங்களைப் பீடிப்பதில் இருந்து நீங்கள் தப்பவே முடியாது. நீங்கள் மஞ்சள் கரைத்து ஊற்றினாலும் சரி, கற்பூரத்தைத் தொட்டு கும்பிட்டாலும் சரி, மேலுள்ள 6 விதிகளில் ஒன்றையேனும் நீங்களோ அல்லது உங்கள் வீட்டில் உள்ள ஒருவரோ மீறினால் உங்களை கொரோனா நிச்சயம் தாக்கியே தீரும்.
எனவே நீங்கள் மூப்பு, பிணி அற்றவர் என்றால், உங்கள் வீட்டில் மூப்பு, பிணி உடையவர்கள் யாரும் இல்லை அல்லது அப்படியானவர்களின் வீடுகளுக்கு நீங்கள் செல்வதில்லை என்றால் இந்த 6 விதிகளையும் தாராளமாக மீறுங்கள். இல்லை என்றால் இந்த விதிகளை நீங்கள் இறுக்கமாகப் பின்பற்றுங்கள்: வீட்டில் இருப்போரைப் பின்பற்ற வையுங்கள். அப்பொழுது தான் கொரோனாவில் இருந்து தப்பலாம்.
அன்புடன்,
கலாநிதி ரஞ்சித் சிறீஸ்கந்தராஜா