கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் நேற்றையதினம்(30) உயிரிழந்த நிலையில், குறித்த நபர் நாவாந்துறை பகுதியில் மூன்று குடும்பங்களின் வீடுகளில் தங்கிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் நாவாந்துறை காதீர் அபூபக்கர் வீதியில் உள்ள அந்த மூன்று குடும்பங்களும்; கிராமசேவையாளரின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாவாந்துறை முழுவதும் முடக்கப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டதால் களுபோவிலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 15 நோயாளர்கள் மற்றும் 20 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.