ஆபத்தான கட்டத்தில் உள்ள இரண்டு நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்காக ஜேர்மனிய இராணுவ விமானம் ஒன்று பிரான்ஸின் ஸ்ரார்ஸ்பூவில் நேற்று (ஞாயிறு) பகல் தரையிறங்கியது.
A400M ரக இராணுவ விமானத்தின் மூலம் அந்த இரண்டு நோயாளிகளும் ஜெர்மனி யின் Stuttgart விமான நிலையத்துக்கு ஏற்றிச் செல்லப்பட்டு அங்கிருந்து பின்னர் நாட்டின் தென் மேற்கில் Ulm என்ற இடத்தில் உள்ள இராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸின் எல்லையோர பிராந்தியமான அல்சாஸில் (Alsace) இருந்து ஏற்கனவே அவசர நோயாளர்கள் பலர் ஜெர்மனி நாட்டு மருத்துவமனைகளின் அவசரசிகிச்சைப் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். எனினும் இந்நடவடிக்கையில் ஜெர்மனிய இராணுவம் நேரடியாக ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும்.
இதேவேளை, நோய்த் தொற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பிரான்ஸின் வட கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து நோயாளர்களை வெளியேற்றும் பணியில் மருத்துவ கடுகதி ரயில்கள்(TGV) ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கிழக்கே முல்ஹவுஸ் (Mulhouse) நான்ஸி( Nancy) ஆகிய நகரங்களில் இருந்து 36 நோயாளிகள் இன்று இரண்டு ரயில்களில் ஏற்றப்பட்டு தீவிர கண்காணிப்புடன் நாட்டின் தென்மேற்குப் பிராந்தியமான Nouvelle-Aquitaine பகுதிக்கு மாற்றப் பட்டுள்ளனர்.
தீவிர தொற்றுள்ள பகுதிகளில் நாளாந்தம் நோயாளர் எண்ணிக்கை பெருகுவதால் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படாத நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றனர்.
(நன்றி-குமாரதாஸன்)