ஆறு மாவட்டங்கள் தொடர்ந்து முடக்கம்; மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிப்பு!

0
668

இரண்டு கிராமங்களுக்கு ‘சீல்’!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை (30) திங்கட்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாகப் பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை மீறுபவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடைமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு மக்களிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம மற்றும் கண்டி மாவட்டத்தில் அக்குரணை ஆகிய கிராமங்கள் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகக் குறிப்பிடப்பட்டள்ளன. எவரும் இந்தக் கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(நன்றி: அரியகுமார் யசீகரன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here