“தனிமையில் இல்லை நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்” – கனேடிய பிரதமரின் துணைவியார்!

0
791

கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டு கிசிச்சை பெற்று வந்த கனடா பிரதமரின் மனைவி சோஃபி கிரேகோயர் ட்ரூடோ பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளதாக மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.

நேற்று சனிக்கிழமை இரவு சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட சோஃபி கிரேகோயர் ட்ரூடோ, தான் பாதிப்பில் இருந்து மீண்டதை மருத்துவா் மற்றும் பொது சுகாதார துறையினா் உறுதிப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

நான் பாதிக்கப்பட்டிருந்த வேளைகளில் நலமடைய வேண்டி வாழ்த்திய அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். பாதிப்புக்குள்ளாகி துன்பப்படும் அனைவருடனும் எனது அன்பைப் பகிர்ந்துகொள்கிறேன் என தனது பேஸ்புக் பதிவில் திருமதி ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மனைவி பாதிக்கப்பட்டதை அடுத்து பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மார்ச் 12 முதல் ஒட்டாவாலில் உள்ள ரைடோ கோட்டேஜில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டார்.

அவரது இரண்டு வார தனிமைப்படுத்தல் காலம் இப்போது முடிந்துவிட்டது.

பிரதமருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. எனினும் மருத்துவா்களின் ஆலோசனையின் பேரில் மேலும் சில நாட்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து பணியாற்றவுள்ளதாக பிரதமா் தெரிவித்தார்.

தங்களது மூன்று குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் ட்ரூடோ கூறினார்.

சனிக்கிழமையன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட செய்தியில் இந்த சவாலான காலங்களில் ஒருவருக்கொருவர் உதவவும், பொது சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் கனேடியர்களுக்கு கிரேக்கோயர் ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.

இது கடினமான காலம். பலா் வேலை இழந்துள்ளனா். மேலும் பலா் தனிமையில் பாதிக்கப்படுகிறார்கள். எனினும் யாரும் தனிமையில் இல்லை நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவா்களை கவனித்துக்கொள்வோம், மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவுவோம் எனவும் கனடா பிரதமரின் மனைவி சோஃபி கிரேகோயர் அழைப்பு விடுத்தார்.

நேற்று சனிக்கிழமை நிலவரப்படி, கனடாவில் 5,600 க்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 61 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here