தமிழர் தாயகப் பகுதிகளில் போரின்போது சிறிலங்கா இனவாத அரக்கர்களினால் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூருவதைத் தடுத்து நிறுத்த சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறை யினரும் வழமைபோன்று தமது கெடுபிடிகளை ஆரம்பித்துள்ளனர். வீதிகளில் வழமைக்கு மாறான சுற்றுக்காவல் நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தாயகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவற்றையும் மீறி தாயகத்தில் மக்கள் தமது உறவுகளை நினைவில் கொள்ளத் தலைப்பட்டுள்ளனர். புலம்பெயர்தேசம் உட்பட தாயகத்தின் பல பகுதிகளிலும் மே 18 முள்ளிவாய்க்கால் வலிசுமந்த நினைவுகளை பல்வேறு வழிகளிலும் நினைவிற்கொண்டுள்ளனர்.
இந்த இனப் படுகொலையை ஒரு நினைவுதினமாக அனுட்டித்து வந்த நாங்கள் இம்முறை மே பதினொன்று முதல் மே பதினெட்டு வரையான காலப்பகுதியை தமிழ் இனப்படுகொலை வாரம் என அனுஸ்டிப்பது என்ற தீர்மானம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.
நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கையில் எழுபது ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட் டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்போல் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமிழ் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள் ளார்கள்.
ஆகவே இந்த படுகொலைகளை நினைவு கூரக்கூடிய விதத்திலே மக்கள் பெரிய அளவிலே துணிந்து முன்வந்து அனுட்டிப்பதன் ஊடாகத் தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதியை கோரி நிற்கின்றோம். எங்களுக்கு ஓர் அரசியல் தீர்வு தேவை என்ற விடயத்தை, பொறுப் புக் கூறலை சிங்கள அரசு உறுதிப் படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட எங் களுடைய மக்களுக்கு நிவாரணம் நீதி கிடைக்க வேண்டும் என்பதை உலகத்திற்கு சொல்லக்கூடிய விதத் தில் மக்கள் ஆர்ப்பரித்து பல்லாயிரக் கணக்கில் எழவேண்டும்.
குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் உயிரிழந்த மக்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர்கள் செய்தது போன்ற அஞ்சலியை நாமும் முள்ளிவாய்கால் உட்பட அனைத்து இடங்களிலும் அஞ்சலி செலுத்துவது எந்த விதத்திலும் எந்த சட்டத்தையும் மீறும் செயலாக அமையாது.
அவ்வாறு நாம் அஞ்சலி செலுத்துகின்றபோது சிங்கள அரசின் படைகள் தடுக்குமாக இருந்தால் அதனை அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் நன்றாக புரிந்துகொள்ளும். ஆகவே எங்களுடைய மக்கள் தமது உறவுகளைப் பறிகொடுத்த மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அனைத்து மாவட்டங்களிலும் ஒன்று கூடி உரிய இடங்களில் நடைபெறுகின்ற தமிழ் இனப்படுகொலை வார நிகழ்வுகளில் கலந்து கொள்வதோடு தாமும் அஞ்சலிகளை செலுத்த வேண்டும்.
இவ்வஞ்சலியை இலங்கை ஆட்சியாளர்கள் எவ்வளவு வன்முறை கள் பிரயோகித்து தடுத்தாலும் எமது மக்கள் கொல்லப்பட்டதனை அனுட்டித்தே காட்டுவோம் என்று உறுதிபடத் தெரிவித்திருந்த அவர், அதனை செயலிலும் காட்டிவிட்டார்.
அதாவது, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத் தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த தமிழ் மக்களை நினை வுகூர்ந்து தீபமேற்றும் நிகழ்வொன்றை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினால் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையில் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடர் ஏற்றி நினைவு கூரப்பட்டதனையடுத்து அங்கு சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வு பிரிவும் காவற்துறையும் பெருமளவில் குவிக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதோடு அச்சநிலையும் காணப்பட்டது. இதனால் தமது உறவுகளை முள்ளிவாய்க்கால் சென்று நினைவுகூர முடியாத நிலையும் அங்கு சிறிலங்கா இராணுவத்தினால் ஏற்படுத்த ப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை முள்ளிவாய்க்கால் சென்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், ரவிகரன், பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதன், வடமாகாணசபை முன் னாள் உறுப்பினர் மேரிக மலா குணசீலன், வலிவ டக்கு பிரதேச சபை உப தலைவர் சஜீவன், வல் வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் கோ.கருணானந்தராசா, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொ.சிவஞான சுந்தரம் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு இரு பொதுச் சுடர்களை ஏற்றி நினைவுரைகளை ஆற்றி எழுச்சியுடன் நினைவுகூர்ந்தனர்.
இதனையடுத்து அங்கு வந்த இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் அங்கு நின்றவர்களைப் படம் பிடித்ததோடு மிரட் டியும் இருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதேவேளை, போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பி னர்களுக்காக தீபமேற்றப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று பேரை அங்கு சந்தித்துள்ளனர்.
இதன்போது, தமது உறவினர்களும் யுத்தத்தில் உயிரிழந்தமை காரணமாக அவர்களுக்காக ஒரேயயாரு தீபத்தை ஏற்றியதாக அவர் கூறியுள்ளார்.
கிடைத்த தகவல் அதுதான். ஒற்றையாட்சிக்குள் விடுதலைப் புலி களை நினைவுகூர்ந்து இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடுசெய்ய முடியாது. அவ்வாறுசெய்தால் அது சட்டவிரோதமானது. எதிர்வரும் 18 ஆம் திகதியும் இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெறலாம் என காவல்துறையினர் அவதானமாக செயற்பட்டுவருகின்றனர் என்று ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இது குறித்து தகவல் தெரிவித்தார்.
இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்.பல்க லைக்கழகத்திலும் நினைவுகூர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து யாழ். பல்கலை சுற்றாடலிலும் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபடத் தலைப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவில் மைத்திரி அரசு, இறந்தவர்களை நினைவுகூரத் தடையில்லை எனச் சர்வதேசத்தை ஏமாற்றும் முகமாகத் தெரிவித் திருந்தார். ஆனால், சிறிலங்காவின் அரச கைக்கூலிப் படைகள் தமிழ் மக்களின் நினைவேந்தலைத் தடுப்பதிலேயே குறியாகவுள்ளன.
இதற்கு புலத்தில் வாழும் எம்மவர்கள் தான் ஒன்றுசேர்ந்து தமது பலத்தை சர்வதேசத்தின் முன் நிலைநிறுத்திக் காட்டவேண்டும். இது எம் ஒவ்வொருவரின் கடமையுமாகும்!
(சூறையாடல்கள் தொடரும்)
– ஈழமுரசுக்காக கந்தரதன்