
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நீக்கப்படவிருந்தது. எனினும், தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு மட்டும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டத்தை அரசு திடீரென நீடித்துள்ளது.
அதற்கமைய கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
இம்மாவட்டங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை 6 மணிக்கு நீக்கப்பட்டு அன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
கொரோனா வைரஸ் பரவலைக் கருத்தில்கொண்டு அதி அபாய வலயங்களாக அரசால் பிரகடனப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதைப் போன்று யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
ஏனைய மாவட்டங்களில் இன்று வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்குக் காலப் பகுதியில் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருள்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்கலை மேற்கொள்ள அரசு சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இதேவேளை, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இடத்துக்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
(‘சுடர் ஒளி’ மாலைப் பதிப்பு
– 26.03.2020)