ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில் ராஜகிரியவில் தேர்தல்கள் செயலகத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் இரண்டாயிரம் பொலிஸாரை ஈடுபடுத்தியுள்ளதுடன் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனப் பேரணி உட்பட ஏனைய பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
ராஜகிரிய ஆயுர்வேத சுற்று வட்டம், வெலிக்கடைச் சந்தி , பாராளுமன்ற வீதி மற்றும் கொட்டாவ வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரையிலான காலப் பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கமைய பகல் ஒரு மணி தொடக்கம் இரண்டு மணி வரையிலான காலப் பகுதியில் ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டம, வெலிக்கடை சந்தி, கொட்டாவ வீதி, பாராளுமன்ற வீதி ஆகியவற்றை ஒரு வழிப் பாதையாகவே பயன்படுத்த முடியும். அத்துடன் இக் காலப்பகுதியில் கனரக வாகனங்களுக்கு இவ்வீதியின் ஊடாகப் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் போக்குவரத்து பஸ்களுடன் ஏனைய வாகனங்கள் மாத்திரம் இந்த வீதியைப் பயன்படுத்த முடியும்.
நண்பகல் 12.30 மணி தொடக்கம் 1.30 மணி வரையிலான காலப் பகுதியில் வெலிக்கடை வீதி, ஆயுர்வேத வீதி, பாராளுமன்ற வீதி மற்றும் கொட்டாவ வீதி என்பன மூடப்படும். எந்த வாகனங்களும் அந்நேரத்தில் பயணிக்க முடியாது.
எனவே இவ் வீதியின் ஊடாகப் பயணிப்பவர்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். இதனால் அதிக வாகன நெரிசல் ஏற்படும் என்பதால் இப் பகுதிகளில் தொழிலுக்குச் செல்பவர்கள் காலை 8.45 மணிக்கு முன்னர் சென்றால் இடையூறுகளை கூடியவரை தவிர்த்துக் கொள்ளலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தேர்தல் செயலகம் அமைந்துள்ள ராஜகிரிய சரண வீதியும் மூடப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகள் , போக்குவரத்துத் திட்டங்கள் தொடர்பில் கட்சி உறுப்பினர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பொது மக்களும் வாகனச் சாரதிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.