கொரோனாவுக்கு இரண்டு புதிய அறிகுறிகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் வெளிபடுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று இருந்தால், காய்ச்சல், சளி தொல்லை, தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும் என்று மருத்துவர்கள் வெளிபடுத்தியிருந்தனர்.
இந்த அறிகுறிகள் இருந்தால், கட்டாயம் மருத்துவர்களை அணுகி பரிசோதிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், ஐரோப்பாவில் உள்ள காது-மூக்கு-தொண்டை மருத்துவ நிபுணர்கள் கொரோனாவுக்கான புதிய அறிகுறிகளை கூறியுள்ளனர்.
அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் வாசனை உணரும் திறனில் திடீரென இயலாமை இருக்குமாம்.
இதனால், சில வேளைகளில் வாசனை உணருதல் முற்றிலும் இல்லாமல் போகுமாம்.அவ்வாறு இருந்தால் வைரஸ் மறைமுகமாக தாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், சுவை அறியும் திறனிலும் பாதிப்பு ஏற்பட்டால் கொரோனாவின் அறிகுறியாக இருக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தென் கொரியா, சீனா, இத்தாலியில் பாதிக்கப்பட்ட மக்களில் கால் சதவீதத்தினருக்கு , வாசனையை உணர்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பிரித்தானிய காது-மூக்கு-தொண்டை அமைப்பின் தலைவர், மருத்துவர் நிர்மல் குமார் கூறுகையில், “தென்கொரியாவில் நோய்த் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 30 சதவீதத்தினர் வாசனையை உணரும் தன்மை இல்லை என்பதே முக்கிய அறிகுறியாக இருந்துள்ளது. மற்ற அறிகுறிகள் இல்லாமல் இது மட்டுமே அறிகுறியாக வந்த பலருக்கு, நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இளவயது நோயாளிகளுக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் குறைவாக உள்ளன. வாசனையை உணரும் தன்மை குறைதல், சுவை குறைதல் இரண்டும்தான் பிரதான அறிகுறிகளாக உள்ளன. இதன்மூலம் வைரஸ் மூக்கின் வழி பரவக் கூடியது என்பது உறுதியாகியிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
வாசனையை உணர்வதிலோ, சுவையை உணர்வதிலோ பிரச்சனையை உணர்ந்தால் இனி அலட்சியம் வேண்டாம் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.