கொரோனா வைரஸ் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் முல்ஹவுஸ் (Mulhouse) பகுதிக்கு ஜனாதிபதி மக்ரோன் சென்றிருக்கிறார்.
அங்கு நிறுவப்பட்டிருக்கும் இராணுவத்தின் நடமாடும் மருத்துவமனைக்கு இன்று மாலை விஜயம் செய்த அரசுத் தலைவர் சுமார் மூன்று மணிநேரம் அங்கு தங்கியிருந்து நோயாளர்களையும் மருத்துவ சேவைகளையும் பார்வையிட்டார்.
அமைச்சர்கள் எவரும் இன்றி ஒரு சிறு ஆளணியினருடன் அங்கு வருகை தந்த அதிபர், ‘மாஸ்க்’ அணிந்து காணப்பட்டார்.
இராணுவ, மற்றும் பொது வைத்திய சாலைகளின் மருத்துவப்பணியாளர்களுடன் உரையாடினார். அடுத்தவர்களின் உயிர்காப்புப் பணியில் தங்களைத் தியாகம் செய்துகொண்டிருக்கும் மருத்துவ சேவையாளர்களுக்கு அப்போது அவர் தனது மரியாதையைச் செலுத்தினார்.
“இந்தப் போரில் நாங்கள் வெல்ல வேண்டும், இதிலிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகின்றேன்.
” ஒரேவிதமான ஆவேசத்துடன் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். எனெனில் போர் என்று வரும்போது நம்மிடமுள்ள அனைத்தையும் அதற்காக நாம்
ஒன்று திரட்டுகிறோம்.அதுபோல நாம் இந்தப் போரில் பிளவுகள் இன்றி ஒருமித்து நிற்போம்” -என்று அங்கு உரையாற்று கையில் மக்ரோன் குறிப்பிட்டார்.
வைரஸ் ஒழிப்புப் பணியில் ‘Operation Resilience’ என்ற பெயரில் முழுமையாக இராணுவத்தினரை ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளார் என்றும் அவர் அங்கு அறிவித்தார்.
‘மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காக பெரும் முதலீடு ஒன்றைச் செய்யப்போவதாக வும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நாட்டின் கிழக்கே அமைந்துள்ள முல்ஹவுஸ் நகரை உள்ளடக்கிய பிரதேசம் பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரம்பலின் மையப் பகுதியாகக் குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள சுவிஷேச தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் இருந்தே வைரஸ் தொற்று முதலில் இனங்காணப்பட்டிருந்தது.
(நன்றி: குமாரதாஸன்)