உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இத்தாலி நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,050 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,07,613 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மிக முக்கியமான நாடு இத்தாலி. இந்த நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,578 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,825 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (21/03/2020) மட்டும் இத்தாலியில் சுமார் 793 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கைகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இத்தாலி நாட்டில் ரோம் நகரில் சிக்கி தவித்த 263 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி திரும்பினர். இதையடுத்து விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் அவர்களை அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே மலேசியா மற்றும் சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 1000- க்கும் மேற்பட்டோர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(நக்கீரன்)