இந்திய ஒன்றியத்தின் பிரதமர் 2020 மார்ச் 22ந்தேதி சுய ஊரடங்கு உத்தரவிட்ட நிலையில் அதற்கு முந்தைய நாளான 21 ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் தூக்கம் வராத துக்கம் தோய்ந்த மனநிலையில் இவ்வறிக்கையினை பதிவிடுகிறேன்.
“கொரானோ” கோரத்தாண்டவமாடும் இச்சூழலில் இப்பதிவு தேவையா என்கிற ஒரு கேள்வி வரும். வலி சுமந்தவர்களுக்கு, நீண்ட நெடுங்காலம் வாழ்க்கையை மட்டுமல்ல தம் மண்ணையும் மானத்தையும் இழந்தவர்களுக்கு நேரமென்ன? காலமென்ன?
2009 மே மாதம் தழிழீழ தேசம், முள்ளிவாய்க்கால் கடற்கரை. மனிதராக பிறந்தவர்கள் ஐந்தே ஐந்து நொடிகள் மட்டும் கண்களை மூடி அன்றைய 16, 17 தேதிகளில் நடந்ததை கண்முன் கொண்டுவாருங்கள். சீனாவும் அமெரிக்காவும், இந்தியாவும் பாகிஸ்தானும் மட்டுமல்ல பல வல்லரசு நாடுகள் ஒன்று சேர்ந்து கையளித்த உலகத்தால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், இரசாயன குண்டுகளையும் இரண்டே இரண்டு கிலோ மீட்டர் பரப்பளவில் ஏறத்தாழ இரண்டரை லட்சம் பேர் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மரண ஓலத்தில் கதறிக் கொண்டிருந்த சூழலில் ஈவு இரக்கமில்லாமல் அடித்து பெய்கின்ற பேய்மழை போன்று குண்டுகளை வீசி ஆண்கள் பெண்கள் வயோதிகர்கள் மட்டுமல்ல பிஞ்சுக்குழந்தைகளைக் கூட அவர்களின் சின்னஞ்சிறு இதயங்களும் கண்களும் அழகழகான சிறிய விரல்களும் சிதறித் தெறிக்க மண்ணோடு மண்ணாகினரே… முள்ளிவாய்க்காலும் நந்திக்கடலும் செங்கடலாக மாறித் தமிழர் பிணங்கள் அநாதைகளாக லட்சக்கணக்கில் மிதந்தனவே… கற்பை மானத்தை உயிரென மதிக்கும் எம் தமிழினத்தின் பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு அவரவர்களின் தந்தை, சகோதரர்களின் முன்னால் நிர்வாணமாக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனரே… எத்தனையெத்தனை பெண்கள் இராணுவத்தினரால் சூறையாடப்பட்டு ஈரக்கொலை அறுத்துக் கொல்லப்பட்டார்கள். அன்றும் உலகம் வேடிக்கை பார்த்தது; இன்றும் நீதி தராமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாத உருவமற்ற ஒரு கொடூர வைரசைக் கண்டு உலகம் முழுக்க மனிதர்கள் நடுநடுங்கித் தங்கள் உயிரைத் தற்காத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கிறீர்களே, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக ஓடி ஓடி களைத்துச் செத்ததுபோக மீதமிருக்கிற தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள உலகம் முழுக்க சிதறி வாழ்ந்து கொண்டிருக்குக்கும் எங்கள் ஈழ உறவுகளை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்.
இன்னும் ஒரு சில நாட்களில் அல்லது சில வாரங்களில் கொரானோ காணாமல் போகலாம். ஆனால் திட்டமிட்டு இதுவரை மூன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்தமைக்கும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதிற்கும் நீதி கிடைத்திடுமா? இன்றும் கூட இனப்படுகொலை செய்த இராஜபக்சேவின் உடன்பிறந்த தம்பி கோத்தபாய யுத்தத்திற்கு பிறகு பிடிபட்டவர்களும் சரணடைந்தவர்களும் இறந்துவிட்டனர் என்று திமிராகக் கூறுவதோடு மட்டுமல்லாமல் ஐ.நா. விசாரணையிலிருந்து வெளியேறுவேன் என்கிறார்.
தனது கணவன் கோவலனுக்கு தவறான தீர்ப்புச் சொன்ன பாண்டிய மன்னனையே சாபமிட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், மதுரை மாநகரையே எரித்தவள் கண்ணகி. அதனை இன்றும் போற்றி புகழ்கின்றோம். கண்ணகியை தமிழ்நாடு, கேரளா, தமிழீழம் மட்டுமல்ல உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழர்களின் இல்லங்களிலும் தெய்வமாக வணங்குகின்றோம். அப்படியானால் ஒருவர் இருவர் அல்ல ஆயிரக்கணக்கான எங்கள் தாய்மார்களின் தாலிகளை அறுத்திருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான எங்கள் வீட்டுப் பெண்களை காட்டுமிராண்டிகளும் சிங்களக் காடையர்களும் சிதைத்தழித்திருக்கின்றார்கள். உலகம் கண்டிக்கவில்லை, தடுத்து நிறுத்தவில்லை. மாறாக கண் இமைக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டாடிக்கொண்டிருந்தது.
தன் கணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு மதுரையை எரித்த கண்ணகியின் சாபம் நேர்மையானதென்றால் ஆயிரமாயிரம் எங்கள் சகோதரிகளின் கணவர்களைப் பலிகொடுத்து தங்கள் கற்பையும் பறிகொடுத்த எம் தமிழச்சிகளின் சாபம் மட்டும் சும்மா விடுமா?
“கொரானோ” இன்னும் இன்னும் கோரத்தாண்டவம் ஆடுவதற்குள் தமிழீழத்திற்கு தீர்வு காண்பதே மனித குலத்திற்கு கடமையாக மட்டுமல்ல தலையாய உரிமையாகவும் இருக்க வேண்டும். இதனை அழுத்தத்தோடு மட்டுமல்ல அறத்தோடும் பதிவு செய்கிறேன். அறம் வென்றால்தான் உலகம் நிலைக்கும்; தழைக்கும். இல்லையேல் உறுதியாக அழியும்.
ஒரு படைப்பாளியாக முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நடந்து முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே “இனி என்ன செய்யப்போகிறோம்” என்கிற உயிர் வலிக்கும் ஓர் ஆவணப்படத்தை படைப்பாக்கம் செய்தேன். அதனைத் தொடர்ந்து இறுதி யுத்தம், கொலைகார காங்கிரசே, விழ விழ எழுவோம், இரத்தக் காட்டேறி ராஜபக்சே, எங்கள் அப்பா என இருபதுக்கும் மேற்பட்ட ஈழத்தின் சிதைவுகளை நெருப்பான ஆவணப்படங்களாக செய்து முடித்தேன். ஒரு கட்டத்தில் உயிர் துடிக்க ரணமாகக் கிடக்கும் எம் உறவுகளின் உடல்களை, குழந்தைகளின் ரத்த சிதில காட்சிகளைப் பார்த்துப் பார்த்து மனம் சித்த பிரமையாகி பைத்தியம் பிடிக்கும் மனநிலை வந்தபோதுதான் படைப்பு செய்வதை நிறுத்தினேன். அப்படியிருந்தும் ஐ.நா. சபையில் திரையிடுவதற்காக (பர்சுயூட் ஆஃப் ஜஸ்டிஸ்) போருக்கு முன்பும் பின்பும் பெண்களின் நிலை என்கிற ஆவணப்படத்தை உருவாக்கி திரையிட்டோம். உலக நீதி மான்கள் அதனைக் கண்டு கதறி அழுதார்களே தவிர இதுவரை நீதி வழங்கவில்லை. ஐ.நாவுக்கு நேரில் சென்றும் இருமுறை பேசினேன். பத்தாண்டுகள் கடந்த நிலையில்கூட உலகமும் ஐ.நா. மன்றமும் நீதி தர மறுக்குது; மழுங்கடிக்கப் பார்க்கிறது; ஏமாற்றத் திட்டமிடுகிறது.
இலங்கை மீது அமெரிக்காவுக்கும் ஒரு கண் உள்ளது; சீனாவுக்கும் ஒரு கண் உள்ளது. தமிழர்கள் மீதான இறுதிப்போரை நடத்தி முடிக்க ஆயுதமும் பணமும் படையும் யார் அதிகம் தந்தார்கள், சீனாவா அமெரிக்காவா இந்தியாவா என பட்டிமன்றம் வைத்தால் தீர்ப்புச்சொல்வது சற்று கடினமாகத்தான் இருக்கும். ஆனால், அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு, இலங்கை காதலோடு உறவாடுவது சீனாவோடு மட்டுந்தான். அப்படிப்பட்ட சீனாதான்- உலகத்திற்கே விவசாயத்தை, ஒழுக்கத்தை, மருத்துவத்தை, வீரத்தை,அறத்தை கற்றுத்தந்த தமிழினத்தை கருவறுக்கத் துணை நின்றதோடு மட்டுமல்லாமல் ஐ.நா. அரங்கில் தன்னுடைய சுய லாபத்திற்காக இலங்கை மீது அமெரிக்கா ஒரு போர்க்குற்றத் தீர்மானம் கொண்டுவந்தபோது அமெரிக்காவையே எதிர்த்து வாக்களித்து இலங்கையை காப்பாற்றியது. இந்தியா நடுநிலை வகித்து மீண்டுமொருமுறை ஈழத்தமிழர்களுக்கு சாவுமணி அடித்து இலங்கைக்கு தாலாட்டுப்பாடியது. இப்படி அன்றும் இன்றும் என்றும் ஈவு இரக்கமில்லாத சீனாவில் கொரானோ போன்ற கொடூர நோய்கள் உருவாகாமல் வேறென்ன தோன்றும். இயற்கையாக மனிதர்கள் சாகலாம். ஆனால் மனிதம் ஒருபோதும் சாகடிக்கப்படக்கூடாது. மனிதத்தை கொன்றவர்கள் மரணத்தைத் தவிர வேறு எதையும் பரிசாகப் பெற முடியாது. சீனாவும், அமெரிக்காவும் நான் வாழ்கிற இந்திய ஒன்றியமும் மனிதத்தை கொன்றுகொண்டிருக்கிறது. இந்தப் பூமிப்பந்தின் ஆதி இனமான அறமான தமிழினத்தை அழிக்க நினைத்தவர்கள் இவ்வுலகில் வாழ்ந்ததாக வரலாறே கிடையாது. சரித்திரத்தில் கூட சீனாவில் கொத்துக்கொத்தாக செத்துக்கொண்டிருந்த சீனர்களை எங்களின் காஞ்சிபுரத்திலிருந்து சென்ற போதிதர்மர்தான் காப்பாற்றினார் என்று கூறி இன்றும்கூட சீனர்கள் எம் தமிழனை தலைசாமியாகவும் குலசாமியாகவும் வணங்கிக்கொண்டு வருகின்றனர்.
ஏ…உலகமே ஐ.நா. மன்றமே, செய்த தப்புக்கும் வேடிக்கைபார்த்த பாவத்திற்கும் இனியாவது எம் ஈழ தமிழர்களுக்கும் எங்களுடைய ஈழ மண்ணுக்கும் நீதியினை வழங்கு; விடுதலையை பெற்றுத்தா; மனிதத்தைக் காப்பாற்று. அனைத்திற்கும் பரிகாரம் தேடு. இல்லையேல் இன்னும் இன்னும் இழப்பைத் தவிப்பை சந்திக்க நேரிடும்.
இறுதியாக ஒரு செய்தி. இவ்வுலகில் பசியினை பெரும்பிணி (பெரு நோய்) என்று சொன்ன ஈடு இணையற்ற பெருமகான் வள்ளலாரின் அருள் வாக்கு- “அறமற்ற அரசு கடுகி அழியும்”.
வ.கௌதமன்
பொதுச்செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி